தி.மு.க. அராஜகங்களின் அணிவகுப்பில்

“தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சட்ட விரோதிகள் தலைதூக்குவார்கள்,  பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்று பிப்ரவரி 25ல் கோவையில் பா.ஜ.க.  கூட்டத்தில் பாரதப் பிரதமர் பேசியதும் தி.மு.க. சீறியது. 2002ல் குஜராத்தில் மோடி ஆட்சிசெய்தபோது, நிகழ்ந்த படுகொலைகளை யாரும் மறந்திருக்க முடியாது என்றார் ஸ்டாலின்.  கோத்ரா கலவர அவலை நினைத்து இப்படி அறிக்கை உரலை இடிக்கிறார். 1967லிருந்து நடந்த தி.மு.க ஆட்சிகளின் அராஜகங்கள், கலவரங்கள்  பற்றி நினைவூட்ட வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழகத்திற்கு நேரு 1958-ல்  வருகை தந்த போது, தமிழர்களை இழிவுபடுத்தி விட்டார் என்ற பொய்யான தகவலைப் பரப்பி,  கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தி.மு.க.வினர் நடத்திய வெறியாட்டம் மறக்க இயலாதது.   சென்னையில் பல சாலைகளில் தி.மு.க.வினர் கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசினார்கள்.   வட சென்னையில் வசித்த மார்வாடிகளின் கடைகள் சூறையாடப்பட்டன.  புஹாரி ஹோட்டல், முரளீஸ் கபே போன்ற உணவகங்கள் தாக்கப்பட்டன.  மவுண்ட் ரோடு, சிந்தாரிப்பேட்டை பகுதிகளில் அரசு பஸ்களுக்கு தீ வைத்தார்கள். “நான் வெளியில் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் நடந்திருக்காது” என்று அண்ணாதுரையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததால் இந்த வன்முறை தி.மு.க.வினாரல் நடத்தப்பட்டது நிரூபணமாயிற்று.

விலையேற்ற எதிர்ப்புப் போராட்டத்தில்
 1962 ஜூலையில் விலையேற்ற எதிர்ப்புப் போராட்டம் நடத்திய தி.மு.க.வினரின் அராஜகத்தைத்  தற்போது தி.முக.வின் கூட்டாளியாக இருக்கும் கம்யூனிஸ்ட் பத்திரிகை ’ஜனசக்தி’ விண்டு வைத்தது. “கலவரக்காரர்களின் கல்வீச்சால் பொது மக்கள் சுமார் 400 பேரும், 75 போலீசாரும் காயமடைந்தார்கள்.  வடசென்னை நாராயண முதலித் தெருவிலிருந்த  கல்யாணப் பந்தலுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தார்கள்.  பந்தலிலிருந்த ஸ்கூட்டரைத் தூக்கிப் போட்டு நாசமாக்கினார்கள். வடசென்னைப் பகுதியிலுள்ள செலக்ட் டாக்கீஸ் என்ற திரைப்படக் கொட்டகையில் புகுந்தும் கலாட்டா செய்தனர், கற்களை வீசி  மக்களுக்கு துன்பத்தை கொடுத்தார்கள். (ஜனசக்தி 20.7.1960).

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
‘ஒருங்கிணைந்த தமிழ்நாடு  ஹிந்தி எதிர்ப்பு மாணவர்  அமைப்பு’ ஒன்றை உருவாக்கி  எல்கணேசன்,  கா.காளிமுத்து, பெ.சீனிவாசன், நாவளவன், ராஜா முகமது, துரைமுருகன், ரகுமான் கான், எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்கள் தளபதிகளாக வலம் வந்தார்கள்.  தூண்டிவிட்டார்கள். ஐம்பது நாள் போராட்டத்தில் 500 பிணங்கள் தெருவில் விழுந்தன.  இவ்வளவு அராஜகம் நடத்திய  தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இன்று  ஹிந்தி கற்பிக்கப்படுகிறது!

கீழ் வெண்மணி படுகொலையில்
கூலி உயர்வு கேட்டுப் போராடிய விவசாயத் தொழிலாளர்கள், இருஞ்சூர் சின்னப் பிள்ளை, திருவாரூர் ராமச்சந்திரன், பக்கிரிசாமி உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.  இந்த சம்பவங்கள் நடந்த பின்னரும்,  தி.மு.க அரசின் அலட்சியம் காரணமாக  1968 டிசம்பர் இறுதியில்  25 பெண்கள், 14  குழந்தைகள் உள்ளிட்ட  44 பேரை உயிருடன்  ஒரு குடிசைக்குள் பூட்டி எரித்த அராஜகம் நடந்தது..  சம்பவம் நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக விவசாயிகள் சார்பாக  அரசுக்கு கடிதம் எழுதிய பின்னரும் பாதுகாக்காமல்,  ரவுடிகளுக்கு துணைபோயிற்று தி.மு.க. அரசு.  44 பேர்களை உயிருடன் கொளுத்தியவர்களில் ஒருவர் கூட தண்டனைக்கு உள்ளாகவில்லை.

கிருபானந்த வாரியார் தாக்கப்பட்டதில்
அண்ணாதுரை மரணமடைந்த போது, “ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்கா வுக்கே போனாலும், டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்”  என நெய்வேலியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் பேசினார் என்று கூறி  வாரியார்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.   குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்தது. 1971 தேர்தலுக்கு முன்பாக ‘கல்கண்டு’ இதழில் அதன் ஆசிரியர் தமிழ்வாணன், “தேர்தல் அறிக்கையில் திமு.க 16 வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.
மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டுமானால் கிருபானந்த வாரியார் போன்ற சாதுக்களை, அவர்கள் எங்களுக்குப் பிடித்தம் இல்லாத விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்கள் என்பதற்காக, எங்கள் ஆட்கள் அடிக்கவோ, மிரட்டவோ மாட்டார்கள்.  அப்படி எவராவது அவர்களை அடித்தாலோ மிரட்டினாலோ, அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் உண்மையாகவே மேற்கொள்வோம்  என்பதை 17வது வாக்குறுதியாக சேர்க்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.   இது தி.மு.க.வின் அராஜகத்துக்கு அத்தாட்சி.

அண்ணாமலைப் பல்கலைக் கழக சம்பவத்தில்
1971-ல் கருணாநிதி முதல்வராகப் பதவி ஏற்றவுடன், கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களில் ஒரு பிரிவினர் (மாணவர் காங்கிரஸ்),  கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று  எழுதப்பட்ட அட்டையைத் தொங்கவிட்டு கேலி செய்தார்கள்.  பலத்த எதிர்ப்புக்கிடையே  கருணாநிதிக்குப் பட்டமளிப்பு விழா நடைபெற்றபோதே,  மாணவர் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள், அறைகளில் தங்கியிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாகத்  தாக்கத் தொடங்கினார்கள்.  பலர் பலத்த காயமடைந்தார்கள். இதில் உதயகுமார் என்ற மாணவர் மறுநாள் காலையில் பல்கலைக்கழகத்திற்குள் உள்ள குளத்தில் பிணமாகக் கிடந்தார். போலீஸ் அடித்துக் கொலை செய்து குளத்தில் வீசிவிட்டது என்ற குற்றச்சாட்டு இன்றுவரை உள்ளது.  இந்த அராஜகத்திற்குத் துணைபோன கருணாநிதியின் அரசு. “பட்டம் பெற்ற நவீன உயர்சாதி அகங்காரம் தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் குழப்பங்களுக்கு காரணம்” என்று தா.பாண்டியன்  கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மலையாளிகளைக் குறிவைத்ததில்
 தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட சமயத்தில், ‘எம்.ஜி.ஆர். மலையாளி’ என்று கருணாநிதி விமர்சித்தார்.   உடனே கருணாநிதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘கருணாநிதி தாசி குலத்தில் பிறந்தவர்’  என்றும்,   அண்ணாவையும், கருணாநிதியையும் தரக்குறைவாக விமர்சனம் செய்துவிட்டார்  எம்.ஜி.ஆர். என்ற வதந்தியைக் கிளப்பி, எம்.ஜி.ஆர். வீட்டின்முன்  மன்னிப்பு கேள் என்று போராட்டம் நடத்தினார்கள்.   எம்.ஜி.ஆர்.  நடித்த படம் வெளியிடப்பட்ட திரையரங்குகள், மலையாளப் படங்கள் ஓடிய தியேட்டர்கள்  தாக்கப்பட்டன. சூறையாடப்பட்டன. ‘மலையாளிகளை விரட்டியடியுங்கள்’ என்ற கோஷத்துடன் தமிழகத்தில் வசித்து வந்த மலையாளிகள் பெருமளவில் தாக்கப்பட்டார்கள்.  கடைகள் தாக்கப்பட்டன. இந்த அராஜகத்தை அடக்கு வாரின்றி அரங்கேற்றியவர்கள் தி.மு.க.வினர்.

நீதிமன்ற தாக்குதலில்
2010 ஏப்ரல் 25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், போலீஸ் டிஜிபி லத்திகா, மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி உள்ளிட்டோர் குறிவைக்கப்பட்டார்கள். முதல்வர் கருணாநிதி மேடைக்கு முன்பாகவே வழக்கறிஞர்கள் திமுக ரவுடிகளால் தாக்கப்பட்டார்கள். வழக்கறிஞர் ஒருவரை ரவுடி முழுச் செங்கல்லால் ஓங்கி அடிக்க முனையும் புகைப்படம் வைரல் ஆனது. அதுபோல 2009 பிப்ரவரி 10 அன்று சென்னை உயர் நீதி மன்ற எல்லைக்குள்ளே ஈழப் பிரச்சினைக்கான போராட்டத்தில்  வழக் கறிஞர்கள்மீதும் நீதிபதிகள் மீதும் போலீசார் தாக்குதல். நடத்தியதில்  நீதிபதிக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டிய காட்சியைப்  பார்த்தவர்கள்
பதறிப்போனார்கள்.

மாநகராட்சி தேர்தலில்
சென்னை மாநகராட்சிக்கு 13.10.2006 நடந்த தேர்தலில் வாக்குப் பதிவு மையங்களில் திமுக-வினர் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்கள் காரணமாக வரலாறு காணாத அராஜகம் என்று சொன்ன உயர்நீதிமன்றம் 100க்கும் அதிகமான வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. கருப்பு பேன்ட் வெள்ளை சட்டை இளைஞர் அணி ரவுடிகள் ஒவ்வொரு வாக்கு சீட்டாகக் கிழித்து உதயசூரியனுக்கு குத்தி சாவகாசமாக ஓட்டு போட்டது டிவியில்  காட்டப்பட்டது.   வெற்றிபெற அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க.வினர். இதுபற்றி த ஹிந்து, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கன் கிரானிகிள்  ஆகிய நாளிதழ்கள் அம்பலப்படுத்தின. “தேர்தல் அதிகாரிகள் பயமுறுத்தப்பட்டார்கள்.  வாகனங்களில் சென்றவர்கள் தாக்கப் பட்டார்கள்.  போலீஸார் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  பூத்துக்கள் தி.மு.க வினரால் கைப்பற்றப்பட்டு,  வாக்குச் சீட்டுகள் தெருக்களில் வீசப்பட்டுக் கிடந்தன.   கத்திகளுடன் வந்த கும்பல் பூத்துகளிலிருந்து வாக்குச் சீட்டுக்களைப் பறித்தது”.  இவை  தி.மு.க.வின் அராஜகத்திற்கு இன்னும் ஓர் அத்தாட்சி.

மர்ம மரணங்களில்…
அண்ணாநகர் ரமேஷ் என்ற கட்டட காண்ட்ராக்டர் தனது குடும்பத்தினருடன் விஷமருந்தி இறந்தார். அப்போது மேயராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் இவர். சென்னையில் மேம்பாலங்களைக் கட்டியதில் பல கோடி நஷ்டம் மாநகராட்சிக்கு ஏற்பட மு.க. ஸ்டாலின் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையில் டிஜி தெய்வசிகாமணி என்ற காண்ட்ராக்டர் தனக்கு அரசு காண்ட்ராக்ட் கிடைப்பதற்காக ரமேஷ் மூலமாக மேயர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருட்டிணன் ஆகியோருக்கு ரூ. 7 கோடி கமிஷன் கொடுத்ததாக போலீசில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு. ரமேஷ் குடும்பத்தினரின் சாவுக்கு போலீசார் சித்திரவதையே காரணம் என்று திமுகவினர் கடுமையாகச் சாடினர். ஆனால், அது தற்கொலை அல்ல, கொலை என்று பேச்சு அடிபட்டது. கொலையை செய்தது யார் என்பது இன்று வரை மர்மம்.

சாதிக் பாஷா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதிக் பாஷா 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர் பாக விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நண்பர். கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திவந்தார் சாதிக் பாஷா. அந்த நிறுவனத்தில் ஆ. ராசாவின் சகோதரர் கலியபெருமாள் மேலாண்மை இயக்குநராக இருந்தார்.

ராசா மத்தியில் அமைச்சரானதை அடுத்து, இவரது தொழில் வேகமாக அபிவிருத்தி அடைந்தது. 2011மார்ச் 16ல் சாதிக் பாட்சா தனது இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அத்துடன், 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகவும் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குதாரராக கிரீன்ஹவுஸ் புரமோட்டர் நிறுவனம் இடம்பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் சாதிக் பாஷாவின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது இன்று வரையில் தெரியவில்லை. தி.மு.கவினரின் குடும்ப சண்டையில் கடந்த 2007ல் மதுரையில் உள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம் பெட்ரோல் குண்டுவீசி எரிக்கப்பட்டது. இதில் வினோத், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூன்று பேர் அநியாயமாக உடல் கருகி பலியாகினர்.

நில அபகரிப்புகளில்…
2006 முதல் 2011 வரை நடந்த தி.மு.க. ஆட்சியில், தி.மு.க.வினர் குறிப்பாக, அமைச்சர்களும் கட்சியில் உயர் பதவியிலிருந்தவர்களும் பலரை மிரட்டி நிலத்தைக் கைப்பற்றிய நில மோசடிப் புகார்கள் 4,000 ஐத் தாண்டின. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது நிலத்தை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மிரட்டி வாங்கியதாக சேஷாத்ரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆரம்பத்தில் முடிந்தால் கைது செய்யுங்கள் என்று வீரம்காட்டினார் ஸ்டாலின். ஒரே மாதத்தில் பணத்தை பைசல் செய்து வழக்கை வாபஸ் பெற்று சுமுகமாகத் தீர்த்துக்கொண்டார். இவர்தான் மோடிமீது கோத்ரா கலவரத்தை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்கிறார். ஸ்டாலினுக்கு சற்றும் குறையாமல் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டிவைத்து, விடியவிடிய சவுக்கால் தனது துணைவியுடன் சேர்ந்து அடித்துத் துவைத்த கதையைக்கேட்டு தமிழகமே பதறியது. திருநெல்வேலியில் இரண்டு தி.மு.க. அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். பின்னால் வந்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் மைதீன் கானும் வேடிக்கை பார்த்தார்கள்.

மோடிஜியின் கோவை குற்றச்சாட்டு முற்றிலும் சரி
தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அராஜகம் தலைதூக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு தொல்லை தரும் சமூக விரோத சக்திகளை அந்த கட்சி வளர்க்கும்.

– ஈரோடு சரவணன்