சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் நடைபெற்றது. இதில் தி.மு.க சிவகங்கை மாவட்ட துணைச் செயலார் சேங்கை மாறன், மற்றொரு தி.மு.கவினரான கோவானூர் சோமன் என பல தி.மு.க ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். அப்போது, சேங்கை மாறன் கோஷ்டிக்கும், கோவானூர் சோமனின் கோஷ்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. நாற்காலியைக் கொண்டு தாக்கிக் கொண்டதில் சோமனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சோமனின் ஆதரவாளர்கள் எதிர்தரப்பினரின் காரை கற்களால் தாக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். காயமடைந்த சோமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.