திசை திருப்பப்படும் சீருடை விவகாரம்

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை செய்யப்பட்டது என்பது பள்ளி சீருடை சம்பந்தப்பட்ட ஒரு சிறிய விஷயம்.. சீருடை என்பது ஜாதி மதம், பணக்காரர் ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மாணவர்களும் இணைந்து பயில ஒரு சுமூக சூழலை உருவாக்கும் ஒரு நல்ல முயற்சி.

ஆனால், பி.எப்.ஐ பயங்கரவாத அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சி.எப்.ஐ), ஸ்டூடண்ட் இஸ்லாமிக் ஆர்கனைசேஷன் (எஸ்.ஐ.ஓ) உள்ளிட்ட பல மதவாத, பயங்கரவாத அமைப்புகள் ஒன்றிணைந்து இதனை ஒரு மதப் பிரச்சினையாக  மாற்றி வருகின்றன. கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் இந்த முயற்சி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதைத்தவிர பல முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் இதனை தேசிய அளவில், மிகப் பெரிய மதப் பிரச்சனையாக கொண்டுசெல்ல முயன்று வருகின்றன.

கர்நாடகாவின் சில பகுதிகள், மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஹிஜாப், காவித்துண்டு என வேண்டுமென்றே பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது இதற்கு சான்று. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வேண்டுமென்றே ஹிஜாபுடன் மாணவிகள் பள்ளிக்கு அனுப்பப்படுவது, ஹிஜாபுடன் அனுமதிக்காவிட்டால் மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறுவது, பள்ளிக்கு எதிராக போராட்டம் என இவர்கள் திட்டமிட்டு நடத்தி வரும் வன்முறை போராட்டங்கள் இதன் ஆழத்தை உணர்த்துகின்றன.

இந்த போராட்டங்களுக்காக பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், இளம் பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை முளைச்சலவை செய்ய, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றம் துரோகம் இழைத்துவிட்டது. நீதிமன்றங்களை நம்பக்கூடாது, நாமே பிரச்சனையை கையில் எடுத்து தீர்வு காணவேண்டும், ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அவர்கள் மனதில் தேசம், அரசு, நீதிமன்றங்களுக்கு எதிராக நஞ்சு விதைக்கப்படுகிறது.

இதற்கு மத சார்பற்ற அமைப்புகள், இடதுசாரிகள், சில தொண்டு நிறுவனங்கள், மாணவர் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போன்றவை ஆதரவளிக்கின்றன. சில வெளிநாட்டு சக்திகளும்கூட இதில் சம்பந்தப்பட்டுள்ள விவரமும் வெளியாகியுள்ளது.

சி.ஏ.ஏ வன்முறை போராட்டம் போலவே இதனை முன்னெடுத்துச் செல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஹிஜாப் சர்ச்சையை பெரிதாக்கி, அதனை ஹிந்துக்களுக்கு எதிராக  திசைதிருப்புவது, ஹிந்துக்களை பயமுறுத்துவது, அரசியல் ஆதாயம் பெறுவது, மதமாற்றங்களை எளிதாக்குவது, மதமாற்றத் தடை சட்டத்தை செயலிழக்க வைப்பது, தேச அமைதியை குலைப்பது, மத்திய அரசுக்கு உலக அளவில் கெட்ட பெயர் ஏற்படுத்துவது போன்றவையே இதன் நோக்கம்.

மதிமுகன்