கூண்டோடு கலைப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு, விவசாயிகள் நலப்பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, சட்டப்பிரிவு, மருத்துவர் அணி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் கலைத்து அக்கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரபு படேல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒப்புதலுடன் கட்சியின் அனைத்து பிரிவுகளும் உடனடியாக கலைக்கப்படுகின்றன. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், மாநில அளவிலான கமிட்டி, பிரிவு, அணி எதுவும் கலைப்படவில்லை. அவை தொடா்ந்து செயல்படும் என பிரபுல் படேல் கூறியுள்ளார். திடீரென தேசிய அளவிலான பிரிவு, கமிட்டிகள் கலைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தேசியவாத காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை. மகாராஷ்டிராவில் ‘மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சி உடன் இணைந்த கூட்டணி ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. ஆட்சி கவிழ்ந்த நிலையில், கட்சியில் மாற்றங்களை செய்ய சரத்பவார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.