கோவை அவினாசி சாலையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு அன்றாடம் அப்பகுதி மக்கள் பலர் இறைவனை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் கார்களை நிறுத்த ஏதுவாக, ‘சிவன் கோயிலை இடிக்க வேண்டும்’ என புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கோயில் சார்பாக யாரும் ஆஜர் ஆகாத நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக காவல்துறை உதவியுடன், மாநகராட்சி அதிகாரிகள் ‘புல்டோசர்’ கொண்டு கோயிலை இடித்தனர். இச்செய்தியை அறிந்த அக்கோயிலின் பக்தர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கோயில் இடிக்கப்படும் காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். “ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய” என்று பெண்கள் பலர் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து அங்குவந்த இந்து முன்னணியினர், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், பா.ஜ.கவினர், கோயில் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சட்டப்படி நீதிமன்றத்தை நாடி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, இக்கோயிலுக்கு அருகேயுள்ள இடத்தை தி.மு.க. பிரமுகர் ஒருவர் வாங்கி நட்சத்திர விடுதி கட்டியிருப்பதாகவும் அந்த ஹோட்டலுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தவே அரசுக்குச் சொந்தமான நிலம் எனகூறி, கோயில் இடிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.