ஷின்சோ அபே மறைவு

ஜப்பானின் முன்னாள் பிரதமரும், ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவருமான ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானிலுள்ள நாரா நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் நடத்திய துப்பாகி சூட்டில் அவர் காயமடைந்தார். உடனடியாக அவரது பாதுகாவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கே அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷின்சோ அபே மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, “நமது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். சர்வதேச அளவில் அவர் சிறந்த அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர், நல்ல நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த இடமாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். பாரதம் ஜப்பான் உறவுகளை உலகளாவிய கூட்டணி நிலைக்கு உயர்த்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தார். முழு பாரதமும் ஜப்பானுடன் வருந்துகிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ( ஜூலை 9) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.