கடந்த ஆண்டு மார்ச் மாதம்கொரோனா வந்ததிலிருந்து இதற்குத் தடுப்பு மருந்தும், தீர்வும் வந்திடாதா என்று வாடினோம். தை பிறந்தது வழியும் பிறந்தது. முதற்கட்டமாக, மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக நலப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டன. இரண்டாம் கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் ஒன்றில் துவங்கியது.
ஆரம்பம் முதலே சில ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும், ”பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை.மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கப் பிரதமர் மோடி, முதலில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்” என்று விமர்சித்தன.
இதற்கு, ”இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் முதலில் காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், அவர் குடும்பத்தினர் நெருக்கமானவர்களுக்கு தடுப்பூசி கிடைத்திருக்கும் அதன் பின்னரே பொது மக்களுக்குத் தடுப்பூசியை வழங்கியிருப்பார்கள். எங்கள் ஆட்சியில் அனைத்தும் முறைப்படியும் சட்டப்படியுமே நடக்கும்” என்று பா.ஜ.கவினர் தக்க பதிலடி கொடுத்தனர்.
இதற்கிடையே இரண்டாம் கட்டத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கிய முதல் நாளிலேயே பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார். ”நான் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்களும் உங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று எதிர்க்கட்சிகளின் வாயை மூடினார். மக்களை முன்னின்று வழிநடத்தும் பிரதமரின் ஆளுமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால், வி.சி.க திருமாவளவன், ”கொரோனா தடுப்பூசிக்கு இப்போது என்ன அவசரம்? ஆபத்தான ஒன்றை மத்திய அரசு செய்கிறது. தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்க ளுக்கு சாதகமாக செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தி.க கட்சித்தலைவர் கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு திருமாவின் பதில் என்ன? தனக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா? கட்சிகளிடையே போட்டிகள் இருப்பது இயல்பு. ஆனால், அவை நாட்டு மக்களின் நலனுக்கானதாக இருத்தல் வேண்டும்.தேர்தலை மனதில் கொண்டு அரசியல், ஆதாயங்களுக்காக செயல்படாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு எதிர்க் கட்சியினரும் ஊடகங்களும் செயல்பட வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆரோக்கிய சேது செயலி, cowin.gov.in இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது நேரிலும் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.