“நான் ஹிந்து அல்ல என்ற போதிலும் ஹிந்துத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளேன்”

1999ல் சர்ப்ஃரோஷ் ஹிந்தித் திரைப்படம் பாலிவுட்டை கலக்கியது. அதில் தேசபக்தி ஒளிர்ந்தது. கோவாவில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் அத்திரைப்படத்தின் இயக்குனர் ஜான் மேத்யூ மாத்தன் கலந்துகொண்டார். செய்தியாளர் அனிதா சௌத்ரிக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு:

சர்ப்ஃரோஷ் தேசபக்த திரைப்படம். அதன் கதை இப்போதும் பொருத்தமாக உள்ளது. குறிப்பாக பாரத – பாகிஸ்தான் உறவுச்சிக்கலை அது பிரதிபலிக்கிறது. இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பாரதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு ஒருபோதும் மேம்பாடு அடைய வாய்ப்பில்லை. ஏனெனில் மத அடிப்படையில்தான் பாகிஸ்தான் பிறந்தது. உண்மையில் மத அரசியலின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் உயிர்ப்புடன் உள்ளது. துரதிருஷ்டவசமாக பாரதத்துடனும் இதே அணுகுமுறையை பாகிஸ்தான் பின்பற்றுகிறது. முன்பு எதைச் செய்ததோ இப்போதும் அதையேதான் பாகிஸ்தான் செய்து வருகிறது. 1999ல் நான் சர்ப்ஃரோஷ் திரைப்படத்தை இயக்கியபோது, பாரதத்தில் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் செயல்பட்டு வருவதை கண்டுகூடாகப் பார்த்தேன்.

சர்ப்ஃரோஷ் திரைப்படத்தை இயக்க உங்களுக்கு உந்துசக்தியாக இருந்தது எது? நீங்கள் எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?
அப்போது நிலவிய விசித்திரமான சூழ்நிலைதான் சர்ப்ஃரோஷ் திரைப்படத்தை இயக்க உந்து சக்தி அளித்தது. நான் மும்பையைச் சேர்ந்த விளம்பரப் பட இயக்குநராக இருந்தேன். அப்போது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் நான் அடிக்கடி பயணம் மேற்கொள்வேன். பணிசார்ந்த பயணங்கள் பன்மைத்தன்மை மிக்க பாரதம் குறித்த புரிதலை ஏற்படுத்தின. நான் டெல்லிக்கும் அடிக்கடி போவதுண்டு. ஒருமுறை நான் டெல்லியை அடைந்தபோது அங்கு காணப்பட்ட அச்சம் நிறைந்த சூழ்நிலை எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.
இதையடுத்து நான் இப்பின்னணியில் ஒருபடம் தயாரிக்க முடிவெடுத்தேன். எனது பணியை நான் துறந்தேன். ‘சர்ப்ஃரோஷ்’ எப்படி வரவேண்டும் என்பதை வாழ்ந்துபார்க்க தீர்மானித்தேன். திரைப்படம் நிறைவைத் தரவேண்டுமானால் இது அவசியம் என்று உணர்ந்தேன். ஜெய்சால்மரில் சில மாதங்களைக் கழித்தேன். அங்குள்ள சூழ்நிலையை உள்வாங்கிக்கொண்டு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் பலர் வாழ்ந்து வந்தனர். கலாச்சாரப் பரிவர்த்தனை என்ற பெயரில் அவர்கள் தங்குதடையின்றி செயல்பட்டு வந்தனர். பல இடர்களை எதிர்கொண்டேன். சவால்களையும் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. திரைப்பட தணிக்கைத் துறை அலைக்கழித்தது. ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதம், பாகிஸ்தான் தொடர்பான வசனங்களையும் காட்சிகளையும் வெட்டி எறியவேண்டும் என்று தணிக்கைத்துறையினர் வற்புறுத்தினார்கள். அதிர்ஷ்டவசமாக பாஜக மூத்தத் தலைவர் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் ஜி எனது நிலைப்பாட்டை ஆதரித்தார். இதனால்தான் இத்திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிட முடிந்தது.

பாலிவுட், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது என்று கூறப்படுகிறதே? இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பாலிவுட் முழுவதும் அப்படி செயல்பட வில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே மோடிஜியை எதிர்க்கிறார்கள். மத்தியில் ஆட்சி நடத்துபவர்கள் தேசியவாதிகள் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். இது தேசபக்தர்களின் அரசாங்கம். மத்திய அரசை எதிர்ப்பவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க இடதுசாரி சிந்தனையாளர்கள் மட்டுமே. அவர்கள், தாங்கள் கூறுவதை மட்டுமே உலகம் செவி மடுக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் விளம்பரம் தேடுவதற்கு இந்த தருணம்தான் மிகவும் சிறப்பானது என்று கருதுகிறார்கள்.

பிரபல ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தார் போன்றோர் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்களே?
ஜாவித் அக்தர் அவரது மாமனார் மறைந்த கைஃபி ஆஸ்மியைப் போல இடதுசாரி எண்ணம்கொண்ட கவிஞர். ஜாவித் அக்தரின் மனைவி சபனா ஆஸ்மியும் இடதுசாரி சிந்தனையாளர்தான். அவர்கள் கம்யூனிஸ்டு சித்தாந்தத்தில் இப்போதும் நம்பிக்கைகொண்டவர்கள். ஆனால், உலகம் முழுவதும் கம்யூனிஸம் காலாவதியாகிவிட்டது. இப்போது கம்யூ னிஸம் எங்குமே உயிர்ப்புடன் இல்லை என்பதை ஜாவித் அக்தர் போன்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும். உலகம் முழுவதும் ரத்தக்களரியை கம்யூனிஸம் ஏற்படுத்தி உள்ளது என்ற உண்மையை சுட்டிக் காட்டாமல் இருக்கமுடியவில்லை. சோவியத் ஒன்றியம் சிதறியதற்குப் பிறகு கம்யூனிஸம் வெண்டிலேட்டர் உதவியுடன்தான் அறை குறையாக சுவாசித்து வருகிறது.

தமிழில் : அடவி வணங்கி