பூரி ஜெகநாதர் கோயில் சேதம்

ஒடிசாவில் உள்ள பூரியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ ஜெகநாதர் கோயிலின் சமையலறையில் இருந்த மண் அடுப்புகளை, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புனிதமான உலகின் மிகப்பெரிய சமையலறையில்தான் “மஹாபிரசாதம்” கடவுளுக்கு சமைக்கப்படுகிறது. மேலும், இங்கு ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு  உணவு சமைக்கப்படுகிறது. ‘ரோஷா சாலா’ என்ற இந்த சமயலறை கோயிலின் மிக முக்கியமான அமைப்பு. இங்கு வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கு மொத்தம் 240 மண் அடுப்புகள் உள்ளன. 100 பணியாளர்கள் பணி செய்கின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு இந்த மண் அடுப்புகளில் 43 அடுப்புகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சேதத்திற்கான காரணம், யார் இதனை செய்தார்கள் என்ற விவரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல இக்கோயில் தொடர்பாக பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த கோயிலை சுற்றி ஒடிசா அரசு பாரம்பரிய வழித்தடப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இப்பணிகள் கோயிலின் அடிப்படை கட்டமைப்பை பலவீனப்படுத்தக்கூடும் என்று பக்தர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், கழிவறைகள் கட்டுவதற்காக, பூரி ஜெகநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள பழமையான ஹிந்துக் கோயில்களை ஒடிசா அரசு அழித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. முதலில் முகலாயர்கள் நமது ஹிந்து கோயில்களை அழித்தார்கள், இப்போது அரசும் அதைத்தான் செய்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா துணைத் தலைவர் ‘பாரம்பரிய வழித்தடம் பூரி கோயிலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல். கோயிலுக்கு அச்சுறுத்தலாக மாறினால் கோயிலைச் சுற்றி நடக்கும் வளர்ச்சிப் பணிகளால் என்ன பயன்?’ என கேட்டுள்ளார்.