இன்று 2021 ஜனவரி 23.
** சரியாக 10 மாதங்களுக்கு முன் நியூயார்க்கில் இருந்து வெளிவரும் ’பாரின் அபேர்ஸ்’ பத்திரிகை, “கொரோனாவால் இந்தியா பேரழிவை சந்திக்கும் அபாயம்” என்று எழுதியது.
** அதை அடுத்த நான்கு மாதங்களுக்குப் பிறகு ’பாஸ்டன் ரிவ்யூ’ பத்திரிகை “வூஹான் பெருந்தொற்றை இந்தியா சமாளித்த விதத்தால் மனிதர்களுக்கு பெரும் ஆபத்து” என்று எழுதியது.
** 2020 ஆகஸ்டில், ’த சயின்டிபிக் அமெரிக்கன்’ பத்திரிகை “கோவிட் 19 பற்றி இந்தியா மழுப்பலாக பேசுகிறது” என்று எழுதியது.
** பிபிசியோ “கோவிட் 19 பேரழிவு கண்டு டெல்லி திகைத்து நிற்கிறது” என தலைப்புச் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இந்தியாவில் சீனப் பெருந்தொற்று வந்து பத்து மாதங்கள் ஆகிவிட்டன.
சீனாவின் வூஹான் நகரில் முதல் பெரும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருஷம், ஒரு மாதம் ஆகிறது. சீனாவுக்கு வெளியில் (தாய்லாந்தில்) முதன்முறையாக சீனப் பெரும் தொற்று ஏற்பட்டு ஒரு வருஷமும் பத்து நாட்களும் கடந்துவிட்டன. இன்றைய தேதியில் பிபிசி என்ன செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள்! “நாள்தோறும் பிரிட்டனில் 1,564 பெரும் தொற்று மரணங்கள்” என்பதுதான் அந்த செய்தி. அந்த நாட்டில் முதல் கோவிட் 19 பாசிட்டிவ் கண்டறியப்பட்டதிலிருந்து 28 நாட்களில் மரணக் கணக்கு இந்த அளவை எட்டிவிட்டதாக சொல்கிறது பிபிசி. “பிரிட்டனின் மருத்துவமனைகள் ஏதோ ராணுவப் பாசறை போல காட்சியளிக்கின்றன” என்று பேசியது சிஎன்என். அமெரிக்க மருத்துவமனைகளும் இதே லட்சணத்தில்தான். இதுவரை அந்த நாட்டில் 2 கோடியே 40 லட்சம் பேர் பெருந்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதாவது உலகம் முழுவதிலும் உள்ள பெரும் தொற்று பிணியாளர்களில் கால்வாசி பேர் அமெரிக்கர்கள். அங்கே பல்வேறு மாகாணங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. குறிப்பாக கலிபோர்னியா முழுஅடைப்பு தேவைப்பட்ட மண்டலம் ஆகிவிட்டது.
பாரதமோ பெரும் தொற்று கிருமியை எப்போதோ முடக்கிப் போட்டுவிட்டது. 2020 ஜூலையிலேயே பிணி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது. பாரதத்திற்கு சர்வநாசம் தான் என்று ஆரூடம் சொன்னவர்களைக் கண்ணிலேயே காணோம்! இந்த செய்தியை நீங்கள் படிக்கிற தருணத்தில் பாரதம் உலகிலேயே மிக பிரம்மாண்டமான தடுப்பூசி போடும் பேரியக்கத்தை நடத்தத் தொடங்கி விட்டது. 130 கோடி பாரத மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. 2021 ஜனவரி 22ம் தேதிக்குள் 10 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது.
2021 ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு அதாவது அமெரிக்காவின் மக்கள் தொகை அளவுக்கு தடுப்பூசி போடும் இலக்கைக் கொண்டுள்ளது பாரதம். தடுப்பூசி போடுவதற்கு 2,00,000 பேருக்கு பாரதம் பயிற்சி அளித்துவிட்டது. தடுப்பூசிக் குழுக்களில் இடம்பெற 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர். தடுப்பூசியை சேமிக்க 29,000 குளிர்பதன கிடங்குகள் தயார்.ஆனால் பாரதம் தன் பயணத்தை முடித்து விடவில்லை.
இதோ மேல் விவரம்:
** பூடானுக்கு இந்தியா அனுப்பியுள்ள வூஹான் பெருந்தொற்று தடுப்பூசி டோஸ்கள் 1.5 லட்சம். அந்த நாட்டுக்கு மருந்து சென்று சேர்ந்த நாள் ஜனவரி 20.
** மாலத்தீவுக்கு பாரதம் தந்த பரிசு ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள்;
** நேபாளத்திற்கு பத்து லட்சம் தடுப்பூசி டோஸ்கள். – இது ஜனவரி 21 அன்று.
** அதே தேதியில் ஏர் இந்தியா விமானம் ஒன்று வங்கதேசத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் சகிதம் அனுப்பப்பட்டது. — முற்றிலும் இலவசமாக.
** மியான்மர் (15 லட்சம்),
** செஷல்ஸ் (50 ஆயிரம்),
** மொரிஷஸ் (1.5 லட்சம்).
** பிரேசில், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு பாரதத்தின் தடுப்பூசி விற்க ஜனவரி 22 அன்று ஒப்பந்தம் போட்டாயிற்று.
** பாரதத்திலிருந்து தலா ஒரு லட்சம் டோஸ்கள் பரிசு பெறும் நாடுகளின் வரிசையில் அடுத்து நிற்பவை இலங்கையும் ஆப்கானிஸ்தானும்.
முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்பட்ட அமெரிக்காவும் இங்கிலாந்தும் பெருந்தொற்று தாக்குதலில் திகைத்து தங்கள் நாட்டு மக்களையே காப்பாற்ற பதறி நிற்கிற வேளையில் ஜூன் மாதத்திலேயே சுதாரித்துக்கொண்ட பாரதம் உலக நாடுகளுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்துவதில் மும்முரமாகிவிட்டது!
கென்யா, நைஜீரியா போன்ற நாடுகள் பாரத தடுப்பூசி மருந்து வராதா என்று ஏங்கிக் காத்திருக்கின்றன. டொமினிக்கா பிரதமர் ரூஸ்வெல்ட் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி தன் நாட்டு மக்களை காப்பாற்ற 7000 தடுப்பூசி டோஸ்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பிரிட்டன், பெல்ஜியம் இரண்டும் பாரதத்திடம் தடுப்பூசி வாங்கிக் கொள்ள ஆசைப்படுகின்றன. இதே வரிசையில் வருபவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள்.இந்த நாடுகள் எல்லாம் பாரத தடுப்பூசிக்கு ஏன் இவ்வளவு ஆசைப்பட்டு வரிசை கட்டுகின்றன? இரண்டு காரணங்கள் பாரத தடுப்பூசி மலிவானது, பாரத தடுப்பூசி பாதுகாப்பானது. தடுப்பூசி சந்தையில் மொடேர்னா தடுப்பூசி 2,100 ரூபாய்; ஸ்புட்னிக் வி தடுப்பூசி 700 ரூபாய் பாரதத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி 420 ரூபாய் தான் ஆகிறது.
பாரத தடுப்பூசியின் தரம் உன்னதம் என்பதும் இன்னொரு காரணி. இப்போது உலகத்தின் பார்மசி என்ற பெயர் பாரதத்திற்கு சூட்டப்பட்டு விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! பாரத மருந்து கம்பெனிகள் உலகின் தடுப்பூசித் தேவையில் 50 சதவீதம் வரை உற்பத்தி செய்கின்றன என்றால் வேறு என்ன பெயர் கொடுக்க முடியும்? பாரதத்தில் தயாராகும் மருந்து உலகின் 170 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்கின்ற பாரதம் அதை ஏழை நாடுகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் உன்னிப்பாக இருக்கிறது என்பதுதான் சிறப்பு. “தான் தயாரிக்கும் இரண்டு கோவிட் 19 தடுப்பூசிகள் கொண்டு உலகத்தை காப்பாற்றிவிட முடியும் என்று பாரதம் கருதுகிறது” என்று பிரதமர் மோடி கூறுகிறார் என்றால் யாராவது மறுக்க முடியுமா?
உலக சுகாதார நிறுவன தலைவர் பாரதத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பாராட்டி விட்டார். இது சீனாவுக்கு பொறுக்கவில்லை. சீன அரசு நடத்தும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை “தடுப்பூசி சந்தையை கைப்பற்றும் எண்ணம் எல்லாம் சீனாவுக்கு கிடையாது” என்று ருத்ராட்ச பூனை வேடம் போட்டது. உண்மை என்ன? சீனாவிடம் பணத்திற்கு பஞ்சமில்லை. பாரதத்திடம் தடுப்பூசி தயாரிப்புக்கான திடமான ஏற்பாடு உள்ளது. சீனா பணத்தை அள்ளி வீசி உலக நாடுகளிடம் ஆதரவு தேடி அலைகிறது. பாரதமோ உலக நாடுகளுக்கு ஆதரவளித்து உலக அரங்கில் தன் செல்வாக்கை ஓங்க செய்துவருகிறது. சீனா நேபாளத்தை குதறி ரணமாக்கியது. பாரதம் நேபாளத்திற்கு மருந்து கொடுத்து ஆறுதல் அளிக்கிறது. சீனா, இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்தது; பாரதம் பெருந்தொற்றுக் காலத்தில் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது.
இலவசமாக தடுப்பூசி தருகிறேன் என்று வங்கதேசத்திடம் சீனா பசப்பிவிட்டு நழுவி விட்டது. பாரதம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வங்கதேசத்திற்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இலவசமாக அனுப்பி வைத்துவிட்டது.பெருந்தொற்றுப் புயல் அடித்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து, கடனை திருப்பிக் கொடு என்று மாலத்தீவின் கழுத்தைப் பிடித்தது சீனா. மாலத்தீவு மக்களுக்கு தடுப்பூசி கொடுத்து குணப்படுத்தி, அந்தநாட்டில் சுற்றுலாத் தொழில் மறுபடியும் தலை தூக்குவதற்கு உதவி செய்துவருகிறது பாரதம்.
உலகிலேயே மற்ற நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்து கொடுக்கிற முதல் நாடு பாரதம். இலவசமாக தடுப்பூசி மருந்து தருகிறேன் என்று பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர் நாடுகளுக்கு ஆசை காட்டிவிட்டு இன்று வரை ஒரு துளி கூட அனுப்பாமல் இருக்கிற நாடு சீனா. இப்போது சீன தடுப்பூசி மருந்து என்றால் வேண்டாம் என்று மற்ற நாடுகள் தலைதெறிக்க ஓடுகின்றன.
காய்ச்சல் மாத்திரை என்ன. மலேரியா மாத்திரை என்ன, கையுறைகள் -முகக் கவசங்கள் வென்டிலேட்டர்கள் என்ன என்று வகைவகையாக மருத்துவ உபகரணங்கள் என்ன, என எல்லாவற்றையும் பாரதம் அள்ளி அள்ளி வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் மக்களுக்கு சுகாதார விஷயங்களில் பயிற்சியும் அளித்து வருகிறது. தற்போது தடுப்பு ஊசி மருந்து வழங்கி வருகிறது.
உலகில் இதுவரை இது போல நடந்ததே கிடையாது. பாரதம் நடத்திக் காட்டுகிறது என்றால் “வசுதைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்) என்று முழங்கும் பாரதத்தின் கலாச்சாரம் தான் அதற்கு காரணம்.
தமிழில் சங்கர மாகாதேவன்
(WION டிவியில் GRAVITAS நிகழ்ச்சியில் பல்கி சர்மா வழங்கிய செய்தித் தொகுப்பு).
மருத்துவர் பார்வை
கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக பரவலாகப் பேசப்பட்டு வரும் புரளிகள் அனைத்தையும் பரப்புபவர்கள் யார் என்று நன்கு தேடிப் பார்த்தால் ஒன்று ”பேஸ்புக் விஞ்ஞானிகள் கூட்டம்” அல்லது ”சீனா -பாகிஸ்தான் பற்றாளர்கள்” இருக்கிறார்கள்.
போலியோ, தட்டம்மை, ரோட்டா வைரஸ், சின்னம்மை தடுப்பூசிகளின் வரிசையில் இப்பொழுது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தடுப்பூசிதான் கொரோனா தடுப்பூசி. மற்ற வெளிநாட்டு தடுப்பூசிகளை போல புதிதாக எந்த ஆபத்தான முயற்சிகளும் செய்யாமல் (mRNA method), இந்திய அரசாங்க அனுமதி பெற்ற கோவிசீல்டு Vector transmission (திசையன் பரிமாற்றம்) மூலமாகவும், கோவாக்சின் inactivated virus (செயலிழக்கப்பட்ட முழு வைரஸ்) மூலமாகவும் என வழக்கமான தடுப்பூசி தயாரிப்பு முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
2015ல் பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று வந்தபோதும் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டது முன் களப்பணியாளர்களான மருத்துவர்களே. அதேபோல இப்பொழுதும் மக்களின் தேவையற்ற அச்சத்தை போக்க மருத்துவர்களே தடுப்பூசியை முன்வந்து போட்டுக் கொள்கின்றனர்.
நிறைவாக, இந்திய அரசாங்கம் இந்தத் தடுப்பூசியை கட்டாயம் ஆக்காத நிலையில் இதன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் போட்டுக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை வீண் வதந்திகளை கண்மூடித்தனமாக பரப்பி தன்னார்வலர்களையும் தடுத்து சமூக நோய் எதிர்ப்புத் கூட்டுத்திறன் (Herd immunity) ஏற்படுவதை தடுக்காமல் இருந்தாலே சாலச் சிறந்தது.நமது நாட்டில் 12 நாட்களில் மொத்தம் 26 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன, மக்களைக்காக்கும் இந்த நற்பணி தொய்வின்றி இதே வேகத்தில் தொடர இந்திய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்கள்.
டாக்டர் எஸ். சந்திரசேகர்