நொய்டாவைச் சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து சுமார் ஒரு வருடமாக சாலைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விவசாயிகள் செய்துவரும் போராட்டம், பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் வேலைக்காக நொய்டாவில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்வது ஒரு பயங்கரமான கனவாக மாறிவிட்டது என தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, ‘ஒரு இடத்தில் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை இருக்கலாம், ஆனால் சாலைகளை இப்படித் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்திருக்க அனுமதிக்க முடியாது. மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உடனடியாக இதற்கு ஒரு தீர்வை வகுக்க வேண்டும்’ என உத்தரவிட்டார். முன்னதாக இதற்கு பதில் அளித்த உ.பி அரசு, சாலைகளைத் ஆக்கிரமிக்கும் சட்டவிரோதச் செயல் குறித்து விவசாயிகளுக்குப் புரிய வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று கூறியிருந்தது. இந்த போராட்டங்களால் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரூ. 27,000 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.