துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகி எமி, வருவாய் துறை முதன்மை செயலரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் ‘துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் டயோசிசன் எனப்படும் கிறிஸ்தவர்களின் திருமண்டல பெருமன்றம், சேகர மன்றத்திற்கான உறுப்பினர் தேர்தல் வரும் 16ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் ஓட்டளிக்க 533 தேவாலயங்களில் 2 லட்சம் வாக்காளர்கள், தமிழகம், டெல்லி, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவார்கள். ‘மூடப்பட்ட தேவாலயத்திற்குள் காலை 9:00 மணி முதல் தேர்தல் நடத்தப்படும். அன்று மாலையே ஓட்டு எண்ணிக்கை நடக்கும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அபாயம் தீராத நிலையில், பூட்டிய தேவாலயத்திற்குள், ஆயிரக்கணக்கானோரை ஓட்டளிக்க அனுமதிப்பது, நோய் பரவலை அதிகரிக்க உதவும். தேர்தலில் போட்டியிடுவோர் ஊரடங்கு விதிகளை மீறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஹிந்துக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்காத தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் தேர்தல் நடத்த அனுமதிக்கலாமா? எனவே, கொரோனா தொற்று அபாயம் உள்ள காலத்தில், சட்டத்தை மதிக்காமல் தேர்தலை அறிவித்துள்ள பிஷப் தேவசகாயம், செயலர் ராஜன் மற்றும் நிர்வாகிகள் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும். அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும், வரும் 16ம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.