தஞ்சையை சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில், மிகப்பெரிய கோயில் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இக்கோயிலை உலக புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. அதில், கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் புத்தக கடை, உணவகம், கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் மேற்கொள்ளலாம். கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில், மேற்கொண்டு கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். புதிய கட்டுமானங்களை அகற்றி, பழைய நிலைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், புராதன சின்னத்தில் இருந்து, எவ்வளவு தொலைவில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்து, தொல்லியல் துறை மற்றும் ஹிந்து அறநிலையத் துறையிடம் விளக்கம் பெறும்படி, அரசு பிளீடருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.