பி.எப்.ஐ அமைப்பினரின் சொத்துக்கள் பறிமுதல்

செப்டம்பர் 23, 2022 அன்று தற்போது தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பால் கேரளாவில் நடத்தப்பட்ட திடீர் கடையடைப்பு வன்முறை கலவரங்களால் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சுமார் ரூ. 5.20 கோடி மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டதாக கேரள அரசு, கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து பிஎ.ப்.ஐ அமைப்பினரால் விளைவிக்கப்பட்ட சேதங்களுக்காக அந்த அமைப்பின் ரூ. 5.20 கோடி மதிப்பிலான சொத்துக்களை இழப்பீடாக பறிமுதல் செய்வற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், கேரள அரசு சொத்துக்கள் பறிமுதல் செய்வதில் மெத்தனம் காட்டியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், கடந்த ஜனவரி 19 அன்று நடைபெற்ற விசாரணையின்போது, இனிமேலும் அரசு இந்த விஷயத்தில் தாமதப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என கூறி கேரள அரசுக்கு இறுதி எச்சரிக்கையை பிறப்பித்தது. இதையடுத்து வேறுவழியின்றி கேரள அரசின் வருவாய்த் துறை, சட்டவிரோத அமைப்பான பி.எப்.ஐ அமைப்பின் மற்றும் அதன் தலைவர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்படி, பி.எப்.ஐ மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தாரின் புதியகாவு, (கருநாகப்பள்ளி), கொல்லம் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் வீடு உள்ளிட்ட சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல, பி.எப்.ஐ அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொருளாளர் யாஹியாகோயா தங்கல், பொது செயலாளர் பி.கே உஸ்மான், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ரஞ்சித் தை கொலை செய்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளான ரூஃப் மற்றும் பாவா ஆகியோரின் சொத்துகளும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், கேரள மாநிலம் முழுவதும் 197 பி.எப்.ஐ அமைப்பினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.