பா.ஜ.க ஆதரவாளர் கிஷோர் கே.சாமியை புதுச்சேரியில் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மழை பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வு புகைப்படத்தை பகிர்ந்திருந்த கிஷோர் கே.சாமி, அதில் அவதூறு கருத்து பதிவிட்டிருந்ததாக கூறி அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கிஷோர்தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் வைத்து அவரை காவலர்கள் கைது செய்தனர். கிஷோர் கே.சாமியின் கைதுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “கிஷோர் கே சாமியின் கைதை தமிழக பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த தி.மு.க அரசு, தமிழக பா.ஜ.க பெண் தலைவர்களை இழிவாக பேசிய தி.மு.க பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? கிஷோர் கே சாமியின் தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழக பா.ஜ.க செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.