பாரதம் உற்பத்தி செய்யும் கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு தேவையான மூலப்பொருட்களை தர மறுத்தது அமெரிக்கா. தனது நாட்டுக்கு தேவையான தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் அளித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்திருந்தார்.
இது அமெரிக்க அரசு தானாக எடுத்த முடிவாக இருக்க வாய்ப்பில்லை. பல மருந்து கம்பெனிகளின் லாபியும் தாராளவாதிகள் எனப்படும் பல லிபரல்களும் இதன் பின்னணியில் செயல்பட்டுள்ளனர் என்பது உலகிற்கே தெரிந்த உண்மை. ஏனெனில் கொரோனா தடுப்பு மருந்துக்காக நம்மிடம்தான் பாரதம் கையேந்த வேண்டும் என அமெரிக்க மருந்து கம்பெனிகள் எதிர்பார்த்தன.
அவற்றின் எதிர்பார்ப்புகளை எல்லாம் முறியடித்து பாரதம் தனது சொந்த கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்தது மட்டுமல்லாமல் அதனை இலவசமாகவும் தனது மக்களுக்கு வழங்கிவருகிறது. ‘மைத்ரி’ திட்டத்தின் கீழ் பல அண்டை நாடுகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் இலவசமாக தருவதோடு பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. இதனால் இந்தத் தடுப்பு மருந்து விற்பனையில் கொழுத்த லாபம் பார்க்க காத்திருந்த அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், பாரதத்தை தன் கைப்பிடியில் வைத்திருக்க காத்திருந்த அமெரிக்க அரசு உட்பட பலருக்கும் இது பொருளாதார அளவிலும் ராஜாங்க ரீதியிலும் பெருத்த ஏமாற்றம். எனவே, அவர்கள் இணைந்து இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க வாய்ப்புள்ளது.
இவர்களின் இந்த சதியை முறியடிக்கும் விதமாக, இந்த மூலப்பொருட்களை பாரதத்திலேயே தயாரிக்க தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஏதுவாக பாரத அரசு சுமார் 4,500 கோடி ரூபாயை இதற்காக உடனடியாக ஒதுக்கியது. மேலும், பாரத் பயோடெக், சீரம் நிறுவனங்களுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ, சி.எஸ்.ஐ.ஆர், சினர்ஜி உள்ளிட்ட ராணுவ, அரசு நிறுவனங்கள் அதில் ஈடுபடும் என தெரிவித்திருந்தது. மேலும் அந்த மூலப்பொருட்களை தான் அளிக்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து நமது தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் ஜேக் சல்லிவன் உடன் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினர்.
அதுவரை மூலப்பொருட்கள் அளிக்க முரண்டு பிடித்துவந்த அமெரிக்கா உடனடியாக, மூலப்பொருட்களையும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்களையும் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடன், ‘கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில் மருந்துகள் இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டபோது, பாரதம் தக்க சமயத்தில் உதவி செய்தது. அதுபோலவே, தற்போது பாரதத்திற்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உதவ நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.’ என தன் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இதுவரை மௌனம் காத்த அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ‘இந்த ஆபத்தான கொரோனா தாக்கத்தின்போது அமெரிக்கா தனது கூடுதல் ஆதரவு, தேவையான பொருட்களை பாரதத்திற்கு வழங்கும். இதற்காக பாரத அரசுடன் அமெரிக்க அரசு நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. பாரத மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.’ என தெரிவித்திருந்தார்.
இதைத்தவிர பல நாடுகளும் பாரதத்திற்கு எந்த உதவியும் செய்யத்தயார் என தன்னிச்சையாக தெரிவித்துள்ளன. இவை அனைத்தும், பிரதமர் மோடி தலைமையிலான நமது பாரத அரசின் மிகச்சிறப்பான வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.