என்னது வீட்டில் கேஸ் காலியா, கரண்டும் இல்லையா பிறகு எப்படி சமைப்பது, எதை சாப்பிடுவது, என்கிற கவலை நம்மை போல அசாம் மாநிலத்தவருக்கு இல்லை!!! அங்கு விளையும் லேசான இனிய நறுமணத்துடன் சற்றே இனிப்பு சுவையுடன் கூடிய சமைக்காமல் சாப்பிடும் கோமல்சவுல் எனப்படும் ஒரு அரிசிவகைதான் இதற்கு காரணம். குமால்சவுல் அல்லது கோமல்சவுல் என வட்டார மொழிகளில் அங்கு இது அழைக்கப்படுகிறது. குமால் என்றால் மென்மையான என்று அர்த்தமாம்,
சமீபத்தில் புவிசார்குறியீடு பெற்றுள்ள இந்த கோமல் அரிசியை வெந்நீரில் 10 நிமிடங்கள் அல்லது சாதாரண நீரில் ஒரு அரைமணி நேரம் ஊறவைத்தால் போதும் எடுத்து அப்படியே சாப்பிட தயார். இது இயற்கையிலேயே மிகுந்த மிருதுத்தன்மையுடன் இருக்கிறது. மக்கள் மறந்துபோன இந்தவகை பாரம்பரிய அரிசி இப்போது அம்மாநில மக்களின் அரிய முயற்சியால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அசாமில் மாலைநேர சிற்றுண்டியை ஜொல்பான் என அழைக்கிறார்கள் அதில் பெரும்பாலும் இடம்பெறும் உணவு வகைகளில் இந்த கோமல் அரிசி உணவுகள் அதிகம் இடம் பெறும். சுவை மட்டும் இல்லாமல் செய்ய எளிதாகவும் இருப்பதால் அசாமில் உள்ள ராணுவத்தினருக்கும்கூட இது பிடித்த உணவு என்கின்றனர். பார்க்க சிறுதானியம் போல சிறியவகை அரிசியாக லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்தவகை அரிசியை அசாமில் ஜூன் ஜூலை மாதங்களில் பயிரிட்டு டிசம்பரில் அறுவடை செய்கின்றனர்.
இதில் ஒரு விஷேஷம் என்னவென்றால் இதற்கு ரசாயன உரங்களை பிடிக்காது மீறி போட்டால் பயிர் சாய்ந்து விடும் அல்லது இறந்துவிடும் எனவே இதில் ரசாயன நச்சுகள் இல்லை. இயற்கை அளித்த கொடையான இந்த இன்ஸ்டன்ட் கோமல் அரிசியில் அதிக அளவு நார்சத்தும் புரதமும் இருப்பதால் இது உடலுக்கு உறமும் ஊக்கமும் அளிக்கிறது. அதே சமயம் இது எளிதில் ஜீரணமாகவும் செய்கிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ஏற்றது இது.
இது எங்கு கிடைக்கும், யாரிடம் சொல்லி வாங்கலாம், நமது சொந்தபந்தங்கள், நண்பர்கள் என யாராவது அங்கு இருக்கிறார்களா அல்லது ஆன்லைனில் வாங்கலாமா என யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? சற்று பொறுங்கள். இயற்கையாக விளையும் இந்தவகை அரிசி மற்ற அரிசி வகைகளைவிட பாதி அளவே மகசூல் தருகிறது என்பதால் விலை சற்று அதிகம்தான். எளிதில் தயிர்சாதம், பால்சாதம், சர்க்கரை பொங்கல் போன்றவைகள் அடுப்பில் ஏற்றாமல் அப்படியே சுவையாக சமைத்து சாப்பிட மிகவும் ஏற்ற இந்த கோமல்சவுலை மற்ற பகுதிகளிலும் பயிரிட்டு அதிகமாக வளர்த்து மக்களிடம் கொண்டு சென்று பிரபலப்படுத்த சில அமைப்புகள் முயற்சி செய்துவருகின்றன. அப்படி அதிகமாக விளையும் பட்சத்தில் இதன் விலையும் குறைந்து அதிகமான மக்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது.