நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளுக்கு 2022 ஏப்ரல் 26 முதல் மே 1 வரை விழிப்புணர்வு முகாமிற்கு தென்னை மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில் ஏப்ரல் 26 அன்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 20,000 தென்னை விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாமின் ஒரு பகுதியாக ‘அறிவியல்பூர்வமான தென்னை சாகுபடி, பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல்’ என்ற தலைப்பில், விழிப்புணர்வு கருத்தரங்குகள் தேசிய, மாநில, மாவட்ட, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் நிலையில் நடத்தப்பட உள்ளன. தமிழகம், கேரளா, திரிபுரா, கோவா ஆகியவை மாநில அளவிலான நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் தளியில் உள்ள தென்னை வாரியத்தின் விதை உற்பத்தி பண்ணை மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி ஏப்ரல் 26 அன்று தொடங்கப்படும். இது தென்னை விவசாயிகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவி செய்யும். இந்த விழிப்புணர்வு முகாமின் ஒரு பகுதியாக, தென்னை பொருட்கள் குறித்த மூன்று நாள் இணையவழியிலான வர்த்தக கண்காட்சி ஏப்ரல் 21 தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறும்.