குஜராத் கலவரம் தொடர்பாக புனையப்பட்ட ஆதாரம் தொடர்பான வழக்கில் தீஸ்டா செடல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், முன்னாள் காவல்துறை இயக்குநர் ஆர்.பி. ஸ்ரீகுமார் (ஓய்வு) ஆகியோருக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.டி) அகமதாபாத் மெட்ரோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அன்றைய குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு மரண தண்டனையை கிடைக்க வைக்க திட்டமிட்டதாக எஸ்.ஐ.டி கூறியுள்ளது. மேலும், ‘ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், போலி ஆவணங்களைத் தயாரித்து அதிகாரப்பூர்வ பதிவுகளில் சேர்த்து தீஸ்டாவுக்கு உதவினார்கள். குற்றப்பத்திரிகையின்படி, அப்போதைய முதல்வர் மோடியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து, அவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்தது. போலி ஆவணங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் தயாரிக்க பல வழக்கறிஞர்களை நியமித்துள்ளனர். இதற்காக கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் பொய் சாட்சியங்களை சொல்லவைக்க முனைந்தனர். அவர்கள் போலியான அறிக்கைகளில் கையொப்பமிட நிர்ப்பந்தித்தனர். குஜராத்தில் தங்களுக்கு நீதி கிடைக்காது என்று அவர்களை தவறாக வழிநடத்தினர். பல காங்கிரஸ் தலைவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முகாம்களுக்குச் சென்றனர் “நீங்கள் தீஸ்டாவை ஆதரிக்கவில்லை என்றால், முஸ்லிம்கள் உங்களுக்கு எதிராகத் திரும்புவார்கள், மேலும் நீங்கள் பயங்கரவாதிகளின் இலக்காகிவிடுவீர்கள். நமக்குள் சண்டை போட ஆரம்பித்தால் எதிரிகள் பலன் அடைவார்கள், மோடிக்கும் லாபம் கிடைக்கும்” என ஒரு சாட்சியை ஆர்.பி.ஸ்ரீகுமார் மிரட்டியுள்ளார். சாட்சிகளை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களை காட்டி நன்கொடைகளை வசூலித்தனர். முதலமைச்சருக்கு மோடிக்கு எதிரான சதியில் தீஸ்டாவுக்கு உதவுவதற்காக பல என்.ஜி.ஓக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்பில் இருந்தனர். நீதிமன்றம் மற்றும் பிற அதிகாரிகள் மீது அழுத்தத்தை உருவாக்க முயன்றனர்’ என கூறப்பட்டுள்ளது.