தமிழக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.கவிற்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்கள். மக்கள் மாற்றத்தை விரும்பி தி.மு.கவிற்கு வாக்களித்து இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை மதித்து தமிழகத்தைம் முன்னேற்றத் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து சமுதாய மக்களின் அன்பை பெற வேண்டும். ஹிந்து மதம் உட்பட அனைத்து மதத்துடனும் ஒரே மாதிரியான நல்லிணக்கம் பேண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
ஸ்டாலினுக்கு முன்னால் கொரோனா பெருந்தொற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சிப் பணி சுணக்கங்கள், மாநில கடன் சுமை, மாநில முன்னேற்றம் என பல்வேறு சவால்கள் காத்துள்ளன. இதனைத்தவிர அவர் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் எனும் கூடுதல் சுமையும் உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, சொத்து வரி, வாகன வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்துவது அல்லது மின் கட்டணம், பால், பேருந்து கட்டணம் போன்றவற்றை உயர்த்தினால் கொரோனாவால் அனைத்து விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது கூடுதல் சுமையாகிவிடும்.
எனவே புதிய முதல்வருக்கு இது சவால்தான் என்றாலும் ஆளும் கட்சியின் விலை உயர்வுக்கும் வரி விதிப்பிற்கும் தி.மு.க எதிர்கட்சியாக இருந்தபோது தெரிவித்த எதிர்ப்பை இதுபோன்ற சமயத்தில் மனதில் கொண்டு வேறு எதேனும் வகைகளில் யோசித்து மாநில வருவாயை பெருக்கி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.