பாரதம், ரஷ்யா, வங்காளதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகள் 2023ம் வருடத்தை ‘சிறுதானியங்கள் ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவை ஐ.நா பொதுச்சபையில் அளித்தன. 70க்கும் மேற்பட்ட நாடுகள் இதை வழிமொழிந்தன. இதன்மீது மார்ச் மாதம் 3ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் 193 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
தமிழகத்தில் தினை, கம்பு, சாமை, கேழ்வரகு, பனிவரகு, வரகு, சோளம், குதிரைவாலி உள்ளிட்டவை சிறுதானியங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நெல், கோதுமை, உள்ளிட்டவை பிரதான தானியங்களாகக் கருதப்படுகின்றன. சிறுதானியங்களை விளிம்பு நிலையில் உள்ள மக்களே பெருவாரியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
நெல், கோதுமை, உள்ளிட்டவை நன்செய்ப் பயிர்கள். இவற்றை விளைவிக்க அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், புன்செய்ப் பயிர்களான சிறுதானியங்களை விளைவிக்க அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை. நன்செய்ப் பயிர்கள் மகசூல் அளிக்க பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், புன்செய்ப் பயிர்கள் சில மாதங்களிலேயே மகசூல் அளித்துவிடுகின்றன.
சிறுதானியங்கள் சீரிய தானியங்களே. சிறுதானியங்களில் பல்வேறு சத்துக்கள் நிறைந் துள்ளன. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறுதானியங்கள் பெரிதும் உதவுகின்றன. சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது குடல் ஆரோக்கியத்தையும் மலச் சிக்கலின்மையையும் உறுதிப்படுத்துகிறது. கொழுப்பினை வெளியேற்றுகிறது. பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. மன அழுத்தம், உளைச்சல் சார்ந்த தூக்கமின்மைக்கு சிறுதானிய உணவு சிறந்த நிவாரணமாக உள்ளது என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆரோக்கியம் குன்றாமல் இருக்கவேண்டுமானால் சிறுதானியங்களைத் தவறாமல் உணவில் சேர்த்து வரவேண்டும். இதன் அடிப்படையில்தான் நம் முன்னோர் ‘உணவே மருந்து’ என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்கள். நம்நாட்டில் காணப்படும் தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக இழந்துவிடுகிறது. இதனால் நோய்களின் கூடாரமாக தேகம் மாறிவிடுகிறது. இந்த அபாயத்திலிருந்து நம்மை மீட்டெடுக்கும் உபாயமாக சிறுதானியங்களே விளங்குகின்றன.
இதைக் கருத்தில்கொண்டுதான் 2023ம் வருடத்தை சிறுதானியங்கள் ஆண்டு என்று ஐ.நா.பொதுச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இச்சூழலில் தமிழக அரசும் சிறுதானிய ஆகாரத்தைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவிலும் சேர்க்க வேண்டும் என்னும் கோரிக்கையை அரசு அமலாக்க முன்வரவேண்டும்.