மத்திய பட்ஜெட் 2023க்கு முன்பு தொழில்துறைத் தலைவர்கள், நிபுணர்களுடன், உள்கட்டமைப்பு, காலநிலை மாற்றம் ஆகியவற்று குறித்து ஆலோசனை கூட்டங்களை நிர்மலா சீதாராமன் நடத்தி, பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட் தயாரிப்பிற்கான பரிந்துரைகளை பெறுகிறார். இக்கூட்டம் நேற்று முதல் துவங்கியுள்ள நிலையில், பாரதத்தின் முதன்மை தொழிற்துறை அமைப்புகளில் ஒன்றான சி.ஐ.ஐ, வருமான வரியை முதலில் குறைக்க வேண்டும், ஜி.எஸ்.டியை குற்றமற்றதாக்குதல் மற்றும் மூலதன ஆதாய வரி விகிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளது. இதுகுறித்து சி.ஐ.ஐ அமைப்பின் தலைவர் சஞ்சீவ் பஜாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்க சிந்திக்க வேண்டும், இது பாரதத்தில் சீர்திருத்தங்களுக்கான அடுத்த கட்ட உந்து சக்தியாக இருக்கும். வருமான வரியைக் குறைப்பதன் மூலம் மக்களிடம் வருமானம், செலவழிப்பு அதிகரிக்கும். இது தேவை அடிப்படையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும். 28 சதவீத ஜி.எஸ்.டி வரிப் பிரிவில் இருக்கும் முக்கியமான நுகர்வோர் பொருட்கள் மீதான வரியைக் குறைப்பதன் வாயிலாக நாட்டின் நுகர்வு அளவீட்டை அதிகரிக்க முடியும். கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். ஒருவர் தனது வர்த்தகத்தில் செய்த குற்றச் செயல்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத வரையில், சிவில் வழக்குகளில் அவரை கைது செய்வதோ அல்லது காவலில் வைப்பதோ கூடாது” என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி, நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். 2024ம் பொதுத்தேர்தல் நடக்கும் நிலையில் தற்போதைய மத்திய அரசு வெளியிட்வுள்ள கடைசி முழுமையான பட்ஜெட் அறிக்கை இது. மேலும், உலக நாடுகள் மோசமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் பட்ஜெட் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.