புதுடெல்லி/ பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு சேமித்து வைக்காமல் தமிழகத்தின் பாசனத்துக்கு நீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 86-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் பேசியதாவது:
விநாடிக்கு 5,000 கனஅடி என்றஅளவில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மைஆணையத்தின் 23-வது கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு செப்.12-ம் தேதியுடன் (நேற்று) நிறைவடைகிறது.
ஆனால், கர்நாடக அரசு முறையாக விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடவில்லை. இதனால், தமிழகத்தில் பயிர்கள் கருகியுள்ளன. தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள 44 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதற்கு கர்நாடக நீர்வளத் துறை செயலர் ராகேஷ் சிங்,‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து அரசியல் செய்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு, அணைகளின் நீர் இருப்பு, திறக்கப்பட்ட நீர், தேவைப்படும் நீர் அளவு ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.
2 மணி நேர தீவிர ஆலோசனைக்கு பிறகு பேசிய காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா, ‘‘தமிழகத்தின் குறுவைசாகுபடிக்காக கர்நாடக அரசுகாவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும். ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும்’’ என்று தெரிவித்தார்.
கர்நாடகா மறுப்பு: ஆனால், குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தமிழகத்தின் பாசனத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
கர்நாடக அணைகளில் போதியஅளவுக்கு நீர் இல்லை. இதுவரை இருப்பில் இருந்த நீரைதமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். எஞ்சியுள்ள நீரைக் கொண்டே கர்நாடக விவசாயிகளின் பாசன தேவை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களின் குடிநீர் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
கர்நாடக அரசை பொருத்தவரை குடிநீருக்கே முதல் முன்னுரிமை. தற்போதைய நீர் இருப்பு குடிநீர் பயன்பாட்டுக்கு போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தமிழகத்தின் பாசனத்துக்கு நீரைதிறந்துவிட முடியாது. இதைகாவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்