விமான கோளாறால் 2 நாட்களாக தவித்த கனடா பிரதமர்

 

புதுடில்லி, விமானத்தில் கோளாறு ஏற்பட்ட காரணத்தால், நாடு திரும்ப முடியாமல், 48 மணி நேரமாக புதுடில்லியில் தங்கியிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நேற்று மதியம் புறப்பட்டு சென்றார்.

வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 51, ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 8ம் தேதி புதுடில்லி வந்தார்.

அவருடன், அவரது 16 வயது மகன் சேவியர் உடன் வந்தார். இருவரும், புதுடில்லியின் லலித் ஹோட்டலில் தங்கினர். இதே ஹோட்டலில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவுடன் தங்கினார்.

மாநாட்டுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாநாடு தொடர்பான நிகழ்வுகளில் தன்னை பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தார். கடந்த 9ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த இரவு விருந்தில் கூட ட்ரூடோ பங்கேற்கவில்லை.

கடந்த 10ம் தேதி, ஜி – 20 மாநாடு முடிந்ததும், கனடா பிரதமர் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது, பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பது, இந்திய துாதரக அதிகாரி களுக்கு எதிராக வன்முறையை துாண்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதற்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்; இந்த செயல்களை கனடா அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

‘இந்தியா- – கனடா உறவின் முன்னேற்றத்திற்கு பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான உறவு அவசியம்’ என, பிரதமர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பை முடித்து, 10ம் தேதி இரவே ஜஸ்டின் ட்ரூடோ கனடா புறப்படுவதாக இருந்தது. ஆனால், அவரது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவர் புதுடில்லியில் தங்க நேர்ந்தது.

அதற்கு மாற்றாக, ராயல் கனடியன் விமானப் படையின், ‘சிசி – 150 போலாரிஸ்’ விமானம், கனடாவில் இருந்து புறப்பட்டு புதுடில்லி வந்து கொண்டிருந்தது.

திடீரென அந்த விமானம் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதனால், ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்புவதில் அசாதாரண சூழல் நிலவியது.

இந்நிலையில், லண்டனில் இருந்து புறப்பட்ட மாற்று விமானம் நேற்று மதியம் புதுடில்லி வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது பிரதிநிதிகள் குழுவினர் நேற்று மதியம் 1:00 மணிக்கு கனடா புறப்பட்டு சென்றனர்.

ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்தி வரும் விமானம், 36 ஆண்டுகள் பழமையானது. அந்த விமானத்தில் பழுது ஏற்படுவது இது முதல்முறை அல்ல.

கடந்த 2018ல் கனடாவில் இருந்து அவர் புதுடில்லி புறப்படும் போது, விமானத்தில் பழுது ஏற்பட்டு பயணம் தாமதம் ஆனது.