சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பிறகு, லடாக் தற்போது வளர்ச்சி, முன்னேற்றத்தை நோக்கி வேகமாக நடைபோடுகிறது. மத்திய அரசு சீன எல்லையில் உள்ள இப்பகுதியின் வளர்ச்சி, உட்கட்டமைப்புகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அவ்வகையில், பாங்காங் த்சோவின் தெற்கு விளிம்பில் உள்ள மெராக், கக்தே கிராமத்தில் முதன்முறையாக பி.எஸ்.என்.எல்லின் அலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ராணுவம் பெரிதும் உதவுகிறது. அதேபோல ராணுவத்திற்கு ஆதரவு தேவைப்பட்டபோதெல்லாம், இக்கிராம மக்கள் தோள் கொடுத்து உதவினர். இக்கிராமவாசிகளின் பல ஆண்டுகால கனவை நனவாக்கும் விதத்தில் ராணுவமும் பி.எஸ்.என்.எல்லும் இணைந்து, பைபர் ஆப்டிக் கேபிள்கள், அலைபேசி கோபுரங்களை நிறுவியுள்ளன.