வங்கதேசத்தில் கடந்த ஆண்டு துர்கா பூஜையின் போது வங்கதேசம் முழுவதும் நடத்தப்பட்ட ஹிந்து விரோத படுகொலைகளின் அதிர்ச்சியில் இருந்து அங்குள்ள ஹிந்துக்கள் இன்னும் வெளிவராத நிலையில், வரும் பிப்ரவரி 5ம் தேதி கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜைக்காக சிட்டகாங்கில் பாசுதேவ் பாலால் என்ற கைவினைஞர் தயாரித்திருந்த ஏறக்குறைய 35 சிலைகளை அவரது சிலை தயாரிப்பு இடத்தில் நள்ளிரவில் நுழைந்த சில முஸ்லிம் வன்முறையாளர்கள் உடைத்து போட்டுள்ளனர். ஏழை கலைஞரின் படைப்புகளின் மீதும், ஹிந்துக்களின் பாரம்பரியத்தின் மீதும் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலால் அப்பகுதி ஹிந்துக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய காவல் நிலையப் பொறுப்பாளர் அப்துல் கரீம், ‘யாரோ வேண்டுமென்றே மூர்த்திகளை அடித்து நொறுக்கியதாகத் தெரியவில்லை. குழந்தைகள் விளையாடும்போது அல்லது தள்ளு வண்டிகளை தள்ளும்போது அல்லது லாரிகளில் மூங்கிலைக் கொண்டு செல்லும்போது ஏற்பட்ட தற்செயல் விபத்தாக இது இருக்கலாம் எனினும் இது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்று பொறுப்பற்ற பதிலை அளித்துள்ளார். காவல்துறையின் இந்த அறிக்கையில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. வங்கதேசத்தின் ஆட்சியில் உள்ள பல முக்கியஸ்தர்கள் கூட ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட பல சம்பவங்களை முன்பு நிராகரித்துள்ளனர் என்று அங்குள்ள ஹிந்துக்கள் கூறுகின்றனர்.