சேலம் பெரியார் பல்கலை பட்டமளிப்பு விழா, நடந்தது. அதில் கவர்னர் ரவி பங்கேற்றார். முன்னதாக, ‘விழாவில் யாரும் கறுப்பு உடை அணிந்து வரக் கூடாது’ என, பல்கலை தரப்பில் அறிவிப்பு வெளியானது. பின், அதை ‘வாபஸ்’ பெற்றனர். பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற மேட்டூர் மற்றும் சேலம் மேற்கு தொகுதிகளை சேர்ந்த, பா.ம.க., — எம்.எல்.ஏ.,க்கள் சதாசிவம், அருள் ஆகியோர், ‘விழாவில் கவர்னருக்கு அருகில் எங்களுக்கு இருக்கை ஒதுக்கவில்லை’ எனக்கூறி வெளிநடப்பு செய்தனர். அன்று மாலையில் நடந்த ஒரு விழாவுக்கு, சேலம் வந்த நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் நேருவை, பா.ம.க., — எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர். ‘பட்டமளிப்பு விழாவில் எங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை’ என, அமைச்சரிடம் புலம்பினர். அதற்கு அமைச்சர் நேரு, ‘அங்க போனா இப்படித் தான் நடக்கும் என தெரிந்தும் ஏன் போனீங்க; அவமானப்பட்ட பிறகாவது கடுமையான எதிர்ப்பை கவர்னருக்கு தெரிவிச்சிருக்கணும். அதை விட்டுட்டு, இங்க வந்து புலம்பி என்ன பிரயோஜனம். இதே தி.மு.க.,காரனா இருந்தா சும்மா விட்டுருப்பானாய்யா?’ என, கேட்டுள்ளார். அதற்கு இருவரும், ‘அந்த நேரத்தில் எங்களுக்கு தோணாமல் போய்டுச்சு…’ என கூறினர். பதிலுக்கு நேரு, ‘சரி சரி, விடுங்க…’ என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பினார்.