தி.மு.கவை சேர்ந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் சொந்த ஊரான முத்தூர் பேரூராட்சியில், தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராக அமைச்சரின் மிக நெருங்கிய உவினரான இளங்கோவின் மகன் விசாகன் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்து வந்தார். அமைச்சரின் அண்ணன் மகன் என்ற உறவு முறையில் உள்ள விசாகன், தற்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். அமைச்சரின் நெருங்கிய உறவினர் ஒருவர் பா.ஜ.க வில் இணைந்தது தி.மு.கவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தி.மு.க உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல இடங்களிலும் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் பொறுப்புகளை வழங்க அமைச்சர்கள் தரப்பு முயன்று வருவதாக கட்சியினரே குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தனக்கு எதிரான கோஷ்டியினருக்கு எந்த ஒரு பதவியும் கிடைத்து விடக்கூடாது என்பதிலும் கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைவார்கள் அல்லது அ.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைவார்கள். இதைத் தவிர்த்து மற்ற கட்சிகளில் இணைவோரின் எண்ணிக்கை மிக சொற்பமே. அதிலும் முக்கியத் தலைவர்கள் இணைவது குதிரைக்கொம்புதான். ஆனால், இப்போது அவர்கள் அனைவரும் தொடர்ந்து பா.ஜ.கவில் இணைந்து வருவது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. பா.ஜ.க தமிழகத்தில் நன்றாக வளர்ந்து காலூன்றிவிட்டதையே இது பிரதிபலிக்கிறது.