அன்னூரில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “அன்னூர் அருகே தொழிற்பேட்டை அமைக்க 3731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் மூலம் 115 குளம், குட்டைகளுக்கு நீர் கிடைத்து விவசாயத்துக்கு அன்னூர் தயாராகும் வேளையில் இந்த அரசாணை பிறப்பித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். எனவே, அதனை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூர் சந்திப்பில் இன்று (டிசம்பர் .7) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் இருந்தும், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் கேரள அரசு, பாலக்காடு மாவட்டத்தில் அதன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் துப்பாக்கி உரிமம் பெற்ற நபர்களை கொண்டு காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துகிறது. எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி பா.ஜ.க விவசாய அணி சார்பில் வரும் 14ம் தேதி கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.