தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவினருக்கு தமிழக ஆளுநரை அவர்களை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள் ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டீர்? சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது மாண்புமிகு தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை. 1956ம் ஆண்டு மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு திராவிட நாடு கோரிக்கை தனித்தமிழ்நாடு என்று சுருங்கியது. இன்றளவும் தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷ செடிகளை வளர்த்து விட்டதில் தி.மு.கவின் பங்கு அனைவரும் அறிவர். வழக்கம்போல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசைதிருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடுகள் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு அறிக்கையில், “பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்குவதில், வழக்கம்போல குளறுபடிகளைச் செய்து வருகிறது திறனற்ற தி.மு.க அரசு. பொங்கல் பரிசை பொதுமக்களுக்கு வழங்குவதில் அவர் கட்சிக்காரர்கள் கொடுக்கும் இடைஞ்சல்களைக் கண்டும் காணாமல் இருக்கிறார் தமிழக முதல்வர். கோவை மாவட்டம் பொன்னையா ராஜபுரம் பகுதியில், பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் மொத்தமும், திமுகவினருக்கே வழங்கியுள்ளனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டும் காணொளி வெளியாகி அதிர்ச்சியைத் தருகிறது. அது மட்டுமல்லாது, திருமுல்லைவாயல் பகுதியிலும், ஆளும் கட்சிக் கவுன்சிலர்களிடம் இருந்து டோக்கன்கள் பெற்றுக்கொள்ளுமாறு, பொதுமக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றன. மேலும் பல்வேறு இடங்களில், பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாக, ரேஷன் கடை ஊழியர்களே வருந்திப் புலம்பும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆளுங்கட்சித் தலையீடை நிறுத்தத் திறனில்லாத திமுக அரசு, ரேஷன் கடை ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுகிறது என்றும் அரசு ஊழியர்கள் வருந்துகிறார்கள். உடனடியாக, பொங்கல் தொகுப்பு வழங்குவதில், ஆளுங்கட்சியினர் தலையீடை நிறுத்தி, பொங்கல் தொகுப்பு டோக்கன்களை, அரசு ஊழியர்கள் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், தனது கட்சிக்காரர்கள் செய்யும் தவறுகளுக்கு, அரசு ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் கண்துடைப்பு நாடகத்தை நிறுத்தி, உரியவர்களுக்குப் பொங்கல் தொகுப்பு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.