கிறிஸ்தவர்களுடன் பா.ஜ.க சந்திப்பு

ஐதராபாத்தில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், வடகிழக்கு மாநில பா.ஜ.க தலைவர்கள் அதிக அளவில் தென் மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும். ஹிந்துக்கள் அல்லாதவர்களை சந்தித்து பேச வேண்டும். பல்வேறு துறைகளில் சிறுபான்மை சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க பா.ஜ.க முன்னெடுத்துள்ள பல்வேறு நேர்மையான செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளை சந்தித்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க தேசிய துணைத் தலைவரும், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மேகாலயா பகுதியின் பா.ஜ.க பொறுப்பாளருமான சுபா ஆவோ, சென்னை வந்தார். சென்னையில் உள்ள கிறிஸ்தவர்களுடனான கலந்துரையாடலில் கடந்த திங்கட்கிழமை பங்கேற்று பேசினார். இந்திய சர்வதேச சுதந்திர திருச்சபை மறைமாவட்டத்தின் பிஷப் கே ஜான்சன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார். தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அமைப்பாளர் கேசவ வினாயகம் ஆகியோரையும் சந்தித்தார். இதுகுறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், “சென்னையில் உள்ள சில கிறிஸ்தவ தலைவர்களை சந்திப்பதற்காக நான் சில காலங்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டிருந்தேன். பிரதமரின் பார்வையான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நான் கவனம் செலுத்தினேன். பாரத நாகரிகம் வசுதைவ குடும்பகம் (உலகனைத்தும் ஒரே குடும்பம்) என்ற கொள்கையை உபநிடத காலத்திலிருந்தே நாம் அறிவோம். இந்த நேசத்துக்குரிய தத்துவத்தின் போதனைகள் என்னவென்றால், மதத்தின் பெயரால் வெவ்வேறு பிரிவு மக்களிடையே மோதல்கள் இருக்கக்கூடாது. இது கிறிஸ்தவ போதனைகளிலும் இது பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக மனித வரலாற்றின் இத்தருணத்தில் மோதலுக்கு இடமில்லை” என்று கூறினார்.