தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், “காஞ்சிபுரத்தில் பழமையான மடங்களில் ஒன்றான தொண்டை மண்டல ஆதீனம் மடத்தின் 233வது ஆதீனமாக திருச்சிற்றம்பல தேசிக ஞானப் பிரகாசபரமாச்சாரியார் கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்த மடத்துக்கு ஆலோசனைவழங்க ஒரு நிர்வாகக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவுக்கும், ஆதீனம் தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியாருக்கும் கருத்து வேறுபாடு வலுத்தது. மேலும், ஆளும் கட்சியினர் உள்ள நிர்வாகக் குழுவின் செயல்பாடும், மிரட்டல் விடுக்கும் போக்கும் அச்சுறுத்துவதாக உள்ளதாக திருச்சிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரியார் தெரிவிக்கிறார். அமைச்சரின் உறவினரின் தலையீடு இருக்கும்போது யாரிடம் புகார் தருவது என்ற அச்சத்தால், அவர் பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை குழுவிடம் கொடுத்து விட்டார். இதனால் புதிய மடாதிபதியைத் தேர்வு செய்யும் வரை ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆதீனத்தை செயல்படாமல் செய்வதற்காக தொண்டை மண்டல ஆதீனத்தில் ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு தாங்கள் நினைத்ததை சாதிக்கின்றனர். இதை பா.ஜ.க வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்று தெரிவித்துள்ளார்.