பா.ஜ.கவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம், கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. நாங்கள் இதை சொல்வதைவிட, தி.மு.கவின் மூத்த தலைவரான துரைமுருகனே இதனை கூறியுள்ளார். அந்த அளவுக்கு மக்களின் மனங்களில் தாமரை இடம்பிடித்துள்ளது. சிறுபான்மையினரிடையே பா.ஜ.க நற்பெயரை பெற்றுள்ளது. எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை மிகச் சிறப்பான செயல்பாடுகளும் சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எங்களை தொடர்ந்து உந்து சக்தியாக செயல்படுத்தக்கூடிய விதமும் சிறுபான்மை மக்களிடத்தில் மிகப்பெரிய நற்பெயரை பா.ஜ.கவுக்கு வாங்கி தந்திருக்கிறது. தி.மு.க காலம்காலமாக பின்பற்றிவரும் வாக்குவங்கி அரசியல் இனியும் தமிழகத்தில் எடுபடாது. தி.முக. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள, தனது ஊழல்களை மறைக்க மத அரசியலை கையில் எடுக்கும். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது தி.மு.க ஆட்சியில்தான். தி.மு.க ஆட்சியில்தான் கார் குண்டுவெடிப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற சம்பவங்கள் நடக்கும். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து முஸ்லிம் இளைஞர்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் சென்றால் எங்களை கைது செய்கிறார்கள். ஜனநாயக ரீதியில் முஸ்லிம் மக்களிடம் எங்க்ல் கருத்துகளை பரப்ப காவல்துறை அனுமதிக்க வேண்டும். கோவையில் அடுத்த ஆறு மாதத்திற்குள் மீண்டும் குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு அந்த பகுதிகளில் இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள். வாக்கு வங்கிக்காக கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் முஸ்லிம்களை பயன்படுத்துகின்றன. தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் திறனற்று உள்ளது. மக்களின் உரிமைகளுக்காக போராடினால் தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை எடுக்கிறார்கள். திருமாவளவன் பட்டியலின மக்களின் துரோகி” என கூறினார்.