வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து கட்சிகள் இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்களின் கட்சியுடன் கூட்டணி அரசில் பா.ஜ.க தற்போது நீடித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் அங்கு பா.ஜ.க தனித்து களம் காண்கிறது. அதேசமயம், நாகாலாந்தில் அங்குள்ள கூட்டணி கட்சியான ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்தே போட்டியிடுகிறது. அங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில், 20 இடங்களில் பா.ஜ.க போட்டியிடுகிறது. இதுகுறித்து பேசிய பா.ஜ.க செயலாளரும், வடகிழக்கு மாநிலங்களுக்கான இணை பொறுப்பாளருமான ரிதுராஜ் சின்ஹா, “தேசத்தின் வளர்ச்சியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் பிரதமர் மோடியையும் முன்வைத்து மேகாலயாவில் பிரசாரம் செய்யப்படும். மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைந்த போதும், வடகிழக்கு மாநிலங்களில் ஊழல் மற்றும் மெதுவான வளர்ச்சி காணப்படுகிறது. எனவே ஊழல் இல்லாத அரசு மற்றும் வேகமான வளர்ச்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என மக்கள் நம்புகின்றனர். அதற்கேற்ப முதல் முறையாக மேகாலயா சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க சிறப்பாக செயல்படும். பிரதமர் மோடி தனது வடகிழக்கு பகுதிகளுக்கு இதுவரை 50 முறைக்கும் மேல் சென்றுள்ளார். இது முந்தைய அனைத்து பிரதமர்களின் வருகையை விட அதிகமாகும். பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்துக்கு தேசிய முன்னுரிமை அளித்துள்ளார். கிழக்கு சார்ந்த கொள்கையை செயல் கொள்கையாக மாற்றியுள்ளார். வடக்கிழக்கில் தற்போது அமைதி நிலவுகிறது. இப்பகுதியில் நெடுஞ்சாலைகள், இணைய இணைப்பு, சாலைவழிகள் மற்றும் விமான நிலையம் போன்ற பல வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது” என கூறினார்.