வேர்ல்ட் ஆங்கிலிக்கன் பியூச்சர் கான்பரன்ஸ் மற்றும் ஆங்கிலிகன் பிஷப்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா ஆகியவை இனைந்து ஹோட்டல் ஐ.டி.சி மௌரியாவில் ‘சர்வதேச கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவை நடத்தியது. இதில், மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் நிறுவனத் தலைவருமான இந்திரேஷ் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், ‘புதிய பாரதம் பிறக்கிறது. மத அடிப்படைவாதத்தை கைவிட்டு, மத மாற்றம் மற்றும் பாகுபாடு போன்ற செயல்களில் இருந்து விலகி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பெரும்பான்மையினருடன் கைகோர்க்குமாறு பாரத மற்றும் உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மத அமைதி, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மதங்களை மதிக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கு நாம் பாடுபட உறுதிமொழி எடுப்போம். இன்று, நமக்கு மத மோதல்கள் உள்ள உலகம் வேண்டுமா அல்லது மத மோதல்கள், பாலின பாகுபாடுகள், தீண்டாமை, கொடுமைகள் இல்லாத உலகம் வேண்டுமா என்ற கேள்வி நம் அனைவருக்குள்ளும் உள்ளது. ஆர்.எஸ்.எஸ் மீதான கிறிஸ்தவ சமூகத்தின் அணுகுமுறையில், பார்வையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தேசியம் பற்றிய கருத்து அவர்கள் முன்பு புரிந்துகொண்டதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். சேவை என்பது வீட்டிலிருந்து தொடங்குகிறது. மத அமைதி, மத சகோதரத்துவம், ஒருவருக்கொருவர் மத மரியாதைகளை உருவாக்குவோம் என்று நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்தால், எல்லாம் மாறும்’ என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்தும், 90க்கும் மேற்பட்ட பேராயர்களும், ஆயர்களும், முஸ்லிம் மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் மற்றும் அமெரிக்க பேராயர் ராபர்ட் கோசெலின் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.