யுனெஸ்கோவின் குழுவில் பாரதம்

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான குழுவிற்கு பாரதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2022 முதல் 2026 வரையிலான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக ‘யுனெஸ்கோ 2003′ மாநாட்டின்படி அமைக்கப்பட்ட அரசுகளுக்கிடையேயான குழுவின்’ உறுப்பினராக பாரதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் 9வது பொதுச் சபையின் போது, 2022 ஜூலை 5 முதல் 7 வரை பாரிஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் அரசுகளுக்கிடையேயான குழுவிற்கான இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டன. பாரதம், வங்கதேசம், வியட்நாம், கம்போடியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஆசிய பசிபிக் குழுவிற்குள் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு ஆறு நாடுகள் தங்கள் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளன. அதில் வாக்களிக்கும் உரிமையுள்ள 155 நாடுகள் பாரதத்திற்கு 110 வாக்குகளை அளித்துள்ளன. இக்காலகட்டத்தில் தனது பதவி காலத்தில், மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தெளிவான பார்வையை பாரதம் வகுத்துள்ளது. சமூகப் பங்கேற்பை வளர்ப்பது, பாரம்பரியத்தின் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, கலாச்சார பாரம்பரியம் குறித்த கல்வி ஆராய்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் ஐ.நா நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் மாநாட்டின் பணிகளைச் சீரமைத்தல் ஆகியவற்றில் பாரதம் கவனம் செலுத்தும். கடந்த காலத்தில், இந்த மாநாட்டின் அரசுகளுக்கிடையேயான குழுவில் 2006 முதல் 2010 வரை மேலும், 2014 முதல் 2018 வரையிலான காலகட்டங்களில் பாரதம் இரண்டு முறை உறுப்பினராக இருந்துள்ளது.