பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் வசிக்கின்றன. சில நாட்களுக்குமுன், அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள வினாயகர் கோயில் மீது தாக்குதல் நடத்தினர். கடவுள் சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். கோயிலின் ஒரு பகுதிக்கு தீ வைக்கப்பட்டது. காவல்துறையால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த அராஜகத்தை நியாயப்படுத்த அங்குள்ள முஸ்லிம் வழிபாட்டு தலத்தின் நூலகத்தின் காம்பௌண்ட் சுவற்றில் 8 வயது ஹிந்து சிறுவன் சிறுநீர் கழித்தான் என வன்முறையாளர்கள் ஒரு காரணம் கற்பித்தனர். பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுவரை அழைத்து இந்த செயலுக்கு பாரதம் தனது கண்டனத்தை பாரதம் தெரிவித்துள்ளது. உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்குமாறும் கூறியது. பாகிஸ்தான், அதன் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில், இந்த சம்பவத்தை கண்டித்ததுடன் பாகிஸ்தான் அரசு அக்கோயிலை புனரமைக்கும் என்று உறுதியளித்தார், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.