தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாத அமைப்பு, முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக ஆக்குவதற்கும் பாரதத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் மற்றும் தாக்குதல்களை நடத்த அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் முகாம்களை நடத்தி வந்தது. அதற்கு அவர்கள் பயன்படுத்திய மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள புளூ பெல் பள்ளி கட்டிடத்தின் 4 மற்றும் 5வது தளங்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சீல் வைத்தது. என்.ஐ.ஏ அறிக்கையில், பி.எப்.ஐ அமைப்பு, இந்த வளாகத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பி.எப்.ஐ அணி சேர்த்தது. 2047ம் ஆண்டுக்குள் நாட்டில் முஸ்லிம் ஆட்சியை நிறுவுவதற்கு எதிரானவர்களை ஒழிப்பதற்கும் தாக்குவதற்கும் ஆயுத பயிற்சி மற்றும் பல்வேறு உடல் ரீதியான பயிற்சிகளையும் அளித்து வந்தது. பயங்கரவாதத்தை செய்யும் நோக்கத்துடன் வன்முறை ஜிஹாதைத் முஸ்லிம் இளைஞர்கள் தழுவுவதற்கு அவர்களைத் தூண்டியது. கடந்த செப்டம்பரில் இந்த பள்ளி வளாகத்தின் இரண்டு தளங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இதுகுறித்த பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி என்.ஐ.ஏவால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், இந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் பி,எப்.ஐ அமைப்பை சேர்ந்த 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், தேசத்திற்கு எதிராகப் போரிட்டு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதன் மூலம் பாரதத்தில் கலிபா மற்றும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கான கிரிமினல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பி.எப்.ஐ பயங்கரவாத அமைப்பின் மூத்த தேசிய அளவிலான உறுப்பினர்கள், பி.எப்.ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகளில் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.