கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, வரும் ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இணை நோய்கள் இருப்போர், இல்லாதோர் என அனைவரும் ஊசியை போட்டுக்கொள்ளலாம். எந்த சான்றிதழும் பெற வேண்டிய அவசியமில்லை.
சென்னை மாநகராட்சியில் நேரு உள்விளையாட்டரங்கம், நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம், 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 சமுதாய நல மையங்கள், 19 மத்திய, மாநில அரசு மருத்துவமனைகள், 175 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைத்தவிர குடியிருப்போர் நலச்சங்க உதவியுடன், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் முகாம்கள் நடத்தப்படுகிறது. உள்ளரங்குகள், வணிக வளாகம், ஓட்டல் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு வசதியாக, தடுப்பூசி மையங்களை எளிதில் அணுக ஏதுவாக அந்த மையங்களின் அமைவிடம் குறித்த கூகுள் வரைபட வழிகாட்டியுடன் கூடிய முகவரிகள் சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/covid-vaccine/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 46 மினி கிளினிக்குகளில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் தமிழகத்தில், தடுப்பூசி மையங்கள் அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களையும் குடும்பத்தையும் சமுதாயத்தையும் காக்க முன்வரவேண்டும். பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி என அனைத்து தலைவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், தடுப்பூசி விஷயத்தில்கூட மக்களை குழப்பி அரசியல் செய்ய முயன்ற எதிர்கட்சித்தலைவர்களும்கூட தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். எனவே, கொரோனா தடுப்பு மருந்தை, எவ்வித தயக்கமும் இன்றி, மக்கள் அனைவரும் போட்டுக்கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், செலுத்திக்கொள்ளாதவர்கள் என அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம், கைகளை கழுவுதல் உள்ளிட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டோமே என அலட்சியமாக இருப்பது மிகவும் தவறு.