சீனாவைச் சேர்ந்த, ‘டென்சென்ட்’ நிறுவனத்துடன் இணைந்து கிராப்டன் என்ற தென்கொரிய நிறுவனம் தயாரித்த ‘பப்ஜி’ அலைபேசி விளையாட்டு உலகில் மிகப் பிரபலம். இதற்கு அடிமையானவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும்கூட அதிகம்தான். சீனாவுடனான எல்லை பிரச்சனை, தேசத்தின் தரவுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பப்ஜியை நமது மத்திய அரசு தடைசெய்தது. பாரதம் மட்டுமல்ல, பப்ஜியை ஆப்கானிஸ்தான், கொரியா, ஜோர்டான், நேபாளம், இஸ்ரேல், ஈராக் உள்ளிட்ட பல நாடுகளும் இதே காரணங்களால் தடை செய்துள்ளன.
பாரதத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க பல வழிகளில் அந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அதனால், தற்போது ‘பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா’ என்ற வேறு பெயருடன் மீண்டும் வருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. தற்போது டென்சென்ட்டை கழற்றிவிட்டு தனியாக விளையாட்டை அறிமுகம் செய்யவிருக்கிறது கிராப்டன். பயனர்கள் தரவுகள் அனைத்தும் இந்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு இங்கேயே சேமிக்கப்படும். வெளிநாடுகளுக்குச் செல்லாது என்றும் தெரிவித்துள்ள கிராப்டன், விளையாட்டு எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.