பாரத பூமியின் பெரும்பகுதியை மத்திய ஆசியாவிலிருந்து வந்த முகலாயர்கள் கைப்பற்றியிருந்த காலகட்டத்தில் அந்த ஆதிக்கத்துக்கு சவால் விட்ட பாரம்பரியத்தின் வாரிசாக சரியாக 400 ஆண்டுகளுக்கு முன் அவதரித்தவர் குரு தேஹ் பகதூர் நமது சீக்கிய சகோதரர்களின் புனிதமான 10 குருமார்களில் ஒன்பதாவது குருவாக போற்றப்படுகிறார் இவர்.
அனந்தபூர் நகரில் அமைந்திருந்த குரு தேஹ் பகதூரின் மாளிகை முகலாயர்களுக்கு சவால் விடும் போர் ஆயத்தங்களுக்குப் பாசறையாக விளங்கியது. ஹிந்துஸ்தானத்தை தாருல் இஸ்லாம் ஆக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒளரங்கசீப், கல்வி கேள்விகளில் சிறந்து இருந்த ஹிந்து மேதைகளின் தாயகமான காஷ்மீர் மீது கண் வைத்த போது காஷ்மீர் ஹிந்துக்கள் குருநாதரிடம் சரணடைந்தார்கள், வழிகாட்டக் கோரினார்கள். காஷ்மீர் உள்பட தேசம் முழுதும் நிலைமை கவலை அளிப்பதாக இருந்தது. இதில் இருந்து விடுபட ஒரே வழி யாராவது ஒரு மாபெரும் ஆன்றோர் தன் உயிரைக் கொடுத்து ஹிந்துக்களுக்கு ஊக்கம் தர வேண்டும். யார் அந்த மாமனிதர் என்ற கேள்வி வந்தபோது குருநாதரின் புதல்வர் கோவிந்த சிங், தாங்களே அந்த மாமனிதர் என்று தந்தையிடம் சொன்னார்.
ஒளரங்கசீப்பின் படை வந்தது. குருநாதரையும் அவரது மூன்று சீடர்களையும் பிடித்து டெல்லி கொண்டு சென்றது. முஸ்லிமாக மாறச் சொல்லி சித்திரவதை நடந்தது. சாந்தினி சவுக் என்ற சதுக்கத்தில் குரு தேஹ் பகதூர் கண்ணெதிரே பாய் மத்திதாஸ் என்ற சீடர் தலை தொடங்கி ரம்பத்தால் இரு துண்டுகளாக அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். பாய் தியாலா என்ற சீடர் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பாய் சத்தி தாஸ் என்ற சீடர் பஞ்சு மூட்டைக்குள் திணிக்கப்பட்டு கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார். தன் சீடர்களுக்கு நேர்ந்த கதி கண்டு குருநாதர் மிரண்டு போவார் என்று ஒளரங்கசீப்பின் ஆட்கள் நினைத்தார்கள். குருநாதரோ அக்கிர மத்திற்கு எதிர்த்துப் போராடுவதுதான் தன்னு டைய தர்மம் என்பதில் உறுதியாக இருந்தார். காஜி உத்தரவிட கொலையாளி குருநாதரின் தலையை உடலிலிருந்து வெட்டி எடுத்தான்.
குருநாதரின் 400வது ஜெயந்தியை கொண் டாடும் இந்த வேளையில் உலகாயத சுக சௌகரியங்கள் நாடி ஓடுபவர்கள் குருநாதர் காட்டிய தியாகமயமான வாழ்க்கையைப் பின்பற்றுவதே முறை. விரத மயமான வாழ்க்கை வாழ்ந்தவர் குரு தேஹ் பகதூர். டெல்லி செல்லும்போது எந்தெந்த கிராமங்கள் வழியாக அவர் சென்றாரோ அந்தக் கிராமங்களில் இன்றும் மக்கள் புகையிலை போன்ற போதைப் பொருட்களை விளைவிப்பது கிடையாது.
மீண்டும் இன்று உலகெங்கும் தீவிரவாத மதவெறி சக்தி தலைதூக்குகிறது. மாற்றத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கும் இன்றைய உலகில், தியாகம் செய், உயிரைப் பொருட்படுத்தாத வீரனாக இரு என்று குருநாதர் காட்டிய பாதையில் நடை போடுவது மட்டுமே அவரைப் போற்றும் விதம். குரு தேக் பகதூரரின் கருத்து வேர் கொண்ட இந்த மண்ணில் புதிய பாரதத்தை நிறுவுவோம்.
(குரு தேஹ் பகதூர் 400 வது ஜெயந்தி மே முதல் தேதி) ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலர் (சர்கார்யவாஹ்) அறிக்கையிலிருந்து).