அமலாக்கத்துறையின்( “ஈ.டி”) ஆடி ஸ்பெஷல் ஆபர் பொன்முடி. அதன் சலுகை இன்னும் தொடரும் என பாஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவரது மகன் உட்பட தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடத்தியது.
இது தொடர்பாக, பாஜ., மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும். இல்லை என்றால் விக்கும். அதுனால சொன்னேன். செந்தில் பாலாஜி , திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிறையில் இருப்பார் என சொன்ன முதல்வர் ஸ்டாலின் சபதத்தை அமலாக்கத்துறை நிறைவேற்றி வைச்சுருக்கு. இதே மாதிரியாக, ஏற்கனவே போடப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் கே.என்.நேரு ஆகிய இரண்டு பேருக்கும் அமலாக்கத்துறை ரெய்டு வரும் என சொன்னேன். இப்போ அனிதா ராதா கிருஷ்ணனை சேர்த்து கொள்ளுங்கள். அதுனால தான் டுவீட்ல கேட்டிருந்தேன். அடுத்து திருச்சியா? தூத்துக்குடியா? என கேட்டிருந்தேன். இதுலாம் ஏற்கனவே போடப்பட்டிருந்த வழக்கு. செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை தலையிட கூடாது எனக் கூறியது.
இதையடுத்து, கோபம் அடைந்த உச்சநீதிமன்றம் மாநில அரசு 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யா விட்டால், நாங்கள் நேரடியாக வழக்கை நடத்துவோம் எனக் கூறியுள்ளது. இது பழிவாங்கும் செயல் அல்ல. பா.ஜ.,வுக்கு இந்த வழக்கிற்கு எந்த தொடர்பும் இல்லை.
நான் சொன்னேன் பல்லாயிரம் கோடிக்கு கிராவல் விற்ற குற்றவாளி பொன்முடி. அவரது வீட்டில் இருந்து எடுத்த கரன்சியில் டாலர் உட்பட பல கரன்சிகள் உள்ளன. அதுனால தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள். அமலாக்கத்துறையின் ஆடி ஸ்பெஷல் ஆபர் பொன்முடி. அதன் சலுகை இன்னும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தக்காளி விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்த கூறியதாவது: நானும் ஒரு விவசாயி. தக்காளி விலை இப்போ கூடுகிறது. ஆனால் மூன்று மாதத்தில் தக்காளி பறி கூலிக்கு கூட காசு கொடுக்க முடியாது என கருதி விவசாயிகள் மாட்டை மேய விடுவார்கள்.
தக்காளி விலையை மக்களே குறைக்கலாம். தக்காளியை வாங்க 4, 5 நாட்கள் போகாதீங்க… தானாக விலை குறையும். அதனால் அரசியல் கட்சிகள் இதை பிரச்னையாக்குகிறார்கள். ஆனால், விலை குறையும் போது எந்த அரசியல்வாதியாவது குரல் கொடுக்கிறார்களா? காரணம் என்னவென்றால் விவசாயி எண்ணிக்கை கூடவா? நுகர்வோர் எண்ணிக்கை கூடவா? என்று பார்த்துதான் இவர்கள் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.