பட்ஜெட்டில் கவர்ச்சிகர அறிவிப்புகள்

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் அரசின் நிதிநிலை அறிக்கையில், ‘2004 ஜனவரி 1க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 100 நாட்களில் இருந்து 125 நாட்களுக்கு நீட்டிப்பு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் என்ற மாநில அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ. 10 லட்சமாக உயர்த்துவது, ரூ. 4,500 கோடி மதிப்பிலான மின் நுகர்வு மானியங்கள்,  காலிப் பணியிடங்களை 32 ஆயிரத்தில் இருந்து 62 ஆயிரமாக உயர்த்துவது,  1.33 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மூன்று வருட இணைய இணைப்புடன் கூடிய அலைபேசி வழங்குவது போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் அனைத்தும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், இது மாநில அரசை கடுமையான நிதிச்சிக்கலில் ஆழ்த்தி திவால் நிலைக்கு அழைத்து செல்லலாம் என நிதித்துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.