கோயில் நிலத்தை மடைமாற்றம் செய்ய முயற்சி

ஆண்டி ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், “செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருவிடந்தை கிராமத்தில் நித்திய கல்யாண பெருமாள் கோயில், பொன்னியம்மன் கோயில் கங்கையம்மன் கோயில் உள்பட ஐந்து கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கோயில் பூஜைகள் உள்ளிட்ட செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை கோயில் நிலம் என வகைப்படுத்தி, பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பொன்னியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3 ஏக்கர் 20 செண்ட் நிலம் தவறாக அனாதீன நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாற்றி, பட்டா வழங்க கோரி அரசுக்கு மனு அளித்துள்ளோம். இந்லையில், திடீரென அந்த நிலத்தை இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு ஒதுக்குவது தொடர்பாக திருப்போரூர் தாசில்தாரர் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, கோயில் நிலத்தை மூன்றாம் நபருக்கு ஒதுக்க தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஜூன் 13ம் தேதிக்குள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், திருப்போரூர் தாசில்தாரர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.