சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்

தூத்துக்குடி தபால்தந்தி காலனியில் வசித்து வரும் தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பியுமான சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் சுமார் 15 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் வந்தது. இந்த கும்பல் சசிகலா புஷ்பா வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியது.இதனால், வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.பின்னர் வீட்டின் ஜன்னல், பூந்தொட்டிகள் மற்றும் நாற்காலிகளை அந்த மர்ம கும்பல் உடைத்தெறிந்தது.பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.தகவல் அறிந்த பா.ஜ.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 13 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம்.தொடர்ச்சியாக தமிழக பா.ஜ.கவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் தி.மு.கவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் பெயரில், தமிழக பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா அவர்களின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்கிய தி.மு.கவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.