ஆண்டாள் கோயிலில் அட்டூழியம்

தமிழக அரசு முத்திரைச் சின்னமாகவும் 108 வைணவ தலங்களில் முக்கியத் தலமாகவும் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில். ஸ்ரீவில்லிப்புத்தூர் மல்லபுரம் தெரு பகுதியில் வசித்து வருபவர் கர்ணன். இவர் ஆண்டாள் கோயிலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு சில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமை தருகின்றனர், இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது, உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகிறது, இது தொடர்பாகச் செயல் அலுவலரிடம் புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கர்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அதிகாரிகள் பணியாட்களைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர், பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்குப் பயந்து இவற்றை வெளியில் சொல்லாமல் உள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சில நாட்களுக்கு முன் கோயில் கணக்கராக பணியாற்றி வரும் சுப்பையா என்பவர், செயல் அலுவலர், பணியாளர்கள் முன்னிலையில் கர்ணனை எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. எனினும், சுப்பையார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. மறுபுறம், தனக்குத் தரப்படும் பணியை கர்ணன் ஒழுங்காக செய்வதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் இருவரையும் விசாரித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.