தொலைதூர வான பொருட்களிலிருந்து மங்கலான ஒளியைக் கண்டுபிடிக்கக்கூடிய ஸ்பெக்ட்ரோகிராப்பை பாரதம் உருவாக்கியுள்ளது. ஸ்பெக்ட்ரோகிராப் & கேமரா (ADFOSC) என பெயரிடப்பட்ட இந்த கருவி, இந்திய அரசாங்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) தன்னாட்சி அமைப்பான நைனிடால், ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவன கண்காணிப்பு அறிவியல் மையம் (ARIES) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் இதுபோன்ற கருவியுடன் ஒப்பிடும்போது இது சுமார் 2.5 மடங்கு விலை குறைவானது. மேலும் துல்லியம் மிக்கது. பாரத்த்தின் வானியல், வானியற்பியல் துறையில் இது ஒரு முக்கியமான ‘ஆத்ம நிர்பர்’ முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் பிரபஞ்சத்தில் தொலைதூர குவாசர்கள், விண்மீன் திரள்கள், கருப்பு துளைகள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சூப்பர்நோவாக்கள் போன்ற காஸ்மிக் வெடிப்புகள், காமா-கதிர் வெடிப்புகள், இளம் நட்சத்திரங்கள், மிகப்பெரிய நட்சத்திரங்கள், மங்கலான குள்ள விண்மீன் திரள்கள் போன்றவற்றை ஆராய முடியும்.