சங்க விருட்சத்தின் விதையும் வேறும்

பட்டப்படிப்பு முடிந்ததும் 1970ல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஆக வீட்டை விட்டுப் புறப்பட்டேன். “இப்போ உன் உடம்பில தெம்பு இருக்கு, வயசானா உன்னை யாரு பார்த்துப்பாங்க?” கேட்டவர்கள் என் அப்பாவும் அம்மாவும். 51 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை ஆண்டுகளில் நான் என்னைப் பற்றி கவலைப்பட்டுக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதே இல்லை. இந்த மண்ணில் நல்ல காரியத்திற்காக, தேசத்துக்காக என்று வருபவனை சமுதாயம் கைவிடுவதே இல்லை என்பதை அனுபவபூர்வமாக நான் சொல்ல முடியும். சங்கத்தில் இன்னும் எத்தனையோ பேருக்கு இதே அனுபவம் என்பதும் எனக்கு தெரியும்.
முதன் முதலாக தூத்துக்குடிக்கு தாலுகா பிரச்சாரக்காகப் போனேன். சைக்கிள் கடை நடத்தி வந்த மணவாளசாமி என்ற சங்க பொறுப்பாளர் வரவேற்றார். பின்னாளில் வழக்கறிஞரான நெல்லையப்பன், அப்போது ஷாகா நடத்தி வந்தார். இவர்கள் சங்கப்பணி செய்ததுடன் என்னையும் கவனித்துக் கொண்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். தேசத்துக்காக வீட்டைவிட்டு வந்திருப்பவன் என்று தெரிந்து டாக்டரும் இலவசமாக சிகிச்சை அளித்தார்.
திருச்செந்தூரில் ஹிந்து நடுநிலைப் பள்ளி நடத்தி வந்த சுந்தரம் வீட்டில் தங்குவேன். அப்போது பியூசி படித்து வந்த அவரது மகன் தற்போது சேவா துறையில் பிரச்சாரக். திருச்செந்தூர் போனால் எனக்கு உணவு, உறைவிட கவலையே கிடையாது. எல்லாம் அவர்கள் வீட்டில் தான். உணவு, உறைவிடம் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தின் இன்பதுன்பம் எல்லாவற்றிலும் பங்கேற்கும் உரிமை
யும் எனக்கு கிடைத்தது. அவர்கள் நடத்தி வந்த பள்ளியில் துறவியர் வந்தால் தங்குவதற்கு என்று ஓர் அறை ஒதுக்கி இருந்தார்கள். தன் குடும்பம் போன்றே வாழும் பல குடும்பங்களை அவர் அறிமுகப்படுத்தினார். எந்த வீட்டில் விசேஷம் என்றாலும் புத்தாடை வாங்கும்போது என்னையும் அந்தப் பட்டியலில் சேர்த்து விடுவார்கள்!
ஸ்ரீவைகுண்டத்தில் கோபாலையர் வீட்டில் தங்குவேன். நான் போகும் போதெல்லாம் அங்கே எல்லா வீடுகளிலும் வரவேற்பு, உபசரிப்பு,விருந்து, தடபுடல் செய்வார்கள். “நான் உங்கள் வீட்டுப் பிள்ளைதானே, எதற்கு இதெல்லாம்?” என்று கேட்டால் “எங்கள் வீட்டுப் பிள்ளைதான். ஆனாலும் தேசத்திற்காக வீட்டை விட்டு வந்திருக்கிறீர்களே?” என்று கேட்டு மடக்கி விடுவார்கள். சங்கப் பணிக்காக யார் யாரை எல்லாம் சந்திக்க வேண்டும் என்று யோசனை சொல்வார்கள். எனது பிரச்சாரக் வாழ்க்கையில் இது ஆரம்ப கட்டம்.
தர்மபுரியில் 1972-–73 காலகட்டத்தில் முன்னாள் பிரச்சாரக் சேஷகிரி ராவ் வீட்டில் வாசம். நான் அங்கே போனால் அவர்கள் அன்றாட வேலைகள் பாதிக்கும். ஆனாலும் இன்முகத்தோடு வரவேற்பார்கள். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவப்பிரகாசத்திற்கு வறுமையான வீட்டு நிலவரம் என்றாலும் சங்கத்திற்காக தன் வேலைகளை ஒதுக்கி வைப்பார். அவரை என்னால் மறக்கவே முடியாது.
நெருக்கடி நிலை காலகட்டத்தில் எனக்கு சென்னையில் சங்கப் பணி. டிடி கௌதம், கஸ்பைங்கர், ரானடே, ஜாம்பஜார் மீனவர் ராஜா என பலர் வீடுகளில் தங்கியிருக்கிறேன். பெரும்பாலான நாட்கள் இராம.கோபாலனின் அண்ணன் சங்கர ஐயர் வீட்டில் தங்குவேன். அந்த கூட்டுக்குடும்ப வீட்டில் இருந்த முப்பது பேரில் நானும் ஒருவன். இரவு 12 மணிக்கு போனாலும் சாப்பாடு போடுவார்கள். கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.
நெருக்கடி நிலையில் சங்கப் பணி குறித்து வாரம் ஒருமுறை சுற்றறிக்கை அனுப்புவோம். இராம. கோபாலன் குறிப்பு தர, அந்த வீட்டிலிருந்த மகளிரும் அதை 70, 80 பிரதிகள் எழுதியெடுப்பார்கள். இராம. கோபாலனுக்கு அப்போது நீலகண்டன் என்ற பெயர்; அந்தப் பெயரில்தான் சிறு குழந்தையும் அவரை அழைக்கும். அவர் தம்பி நடராஜன், அண்ணன் மகன் ராமசாமி, அக்கா மகன் சந்திரசேகர் என எல்லோரும் அஞ்சாமல் நெருக்கடி நிலைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். இதுபோல சென்னையில் மட்டும் சுமார் 600 குடும்பங்கள் அந்தக் காலகட்டத்தில் சங்க வீடுகளாக இயங்கின. நுங்கம்பாக்கம் ஐஓபி ராமகிருஷ்ணன் வீட்டில் மகளிரும் சத்யாகிரகம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவருக்கு ஒரு பழக்கம். எந்த ஊருக்கு மாற்றலாகிப் போனாலும் அங்கே தன்னுடன் சங்கத்தையும் கொண்டு போவார்.
ராஜபாளையத்தில் 1978 -– 79ல் எனக்கு சங்கப்பணி. ராமகிருஷ்ண ராஜாவின் பாலிடெக்னிக்கில் 30 நாள் சங்க முகாம் நடந்தது. எத்தனை பேர் வருவார்கள் என்று ராஜா கேட்டார்; நானூறு என்றோம். உணவுப் பட்டியல் கொடுங்க, நானே ஏற்பாடு செய்கிறேன் என்றார் அவர். அப்போதைய மாநில அமைப்பாளர் சூரியநாராயண ராவ், ஒரு நாள் உணவு கொடுங்கள் போதும் என்று கூறிவிட்டார். ஆச்சரியமடைந்த ராஜா வேறு பல வழிகளிலும் முகாமிற்கு உதவினார். ராமகிருஷ்ணன், சுப்ரமணியன் போன்றவர்களின் குடும்பமே சங்க மயம். அந்த ஊரே சங்கத்திற்கு ஆதரவு. நான் போன மூன்றாண்டுகளில் ராஜபாளையத்தைச் சுற்றி 16 ஷாகாக்கள்.
அடுத்து மதுரையில் பிரச்சாரக் வாழ்க்கை. தமிழாசிரியர் டிவி ரங்கராஜன் குடும்பம், தினமணி செய்தி ஆசிரியர் சந்தானம் குடும்பம் என நூற்றுக்கணக்கான சங்க ஆதரவு குடும்பங்கள். நரரசிம்மாச்சாரியின் இல்லம் எப்போதும் சங்க பிரச்சாரகர்களுக்காக திறந்தே இருக்கும். நத்தத்தில் சீதாராமன், திருச்செந்தூரில் ஜெகன்னாதன், நாகர்கோவிலில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், டெலிபோன்ஸ் பாலசுந்தரம், ஆசிரியர் குமாரசாமி என எத்தனையோ பேர் வீடுகள். இங்கே சொன்ன ஒவ்வொரு வீட்டுடனும் இன்றும் எனது தொடர்பு நீடிக்கிறது.
தமிழகம் நெடுக சங்கப் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சங்க லட்சியத்தை மக்களிடையே கொண்டு செல்ல நேரம் பிடித்ததே தவிர, எனக்கு வேறு எந்த கவலையும் இருந்ததில்லை. பிரச்சாரகர்கள் விதை போல. அவர் களுக்கு ஆதாரமாக நிற்கும் வேர்கள் ஏராளமான குடும்பங்கள். தனிமை என்ற உணர்வு எனக்கு வந்ததே இல்லை. தங்கள்குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு முழு நேர ஊழியர்களையும் ஆதரித்தபடி குருதட்சிணையும் சமர்ப்பிக்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சங்க வளர்ச்சிக்குக்காரணம். எந்தத் தடையையும் தங்கி சங்கம் முன்னேறுவதன் சூட்சுமம் அதுதான்.
-ஸ்ரீகணேசன்