தி.மு.கவின் மற்றுமொரு ஸ்டிக்கர் திட்டம்

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அ.தி.மு.க அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு, புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள இந்த செயல் திறனற்ற தி.மு.க அரசு, அ.தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் “நம்ம ஸ்கூல்” என்று நாமகரணம் சூட்டி ,இந்த தி.மு.க அரசின் முதல்வர் மீண்டும் அதை துவக்கி வைத்திருக்கிறார்.  தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கிய பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்வதில் குறியாக இருக்கும், சந்தர்ப்பவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க அரசு, வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இத்திட்டத்தையும், இத்திட்டத்திற்காக தனியாக துவக்கப்பட்ட இணையதளத்திற்கும் மூடுவிழா நடத்தியது. எனினும் தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை அணுகத் தொடங்கியதன் அடிப்படையில், அ.தி.மு.க அரசு கொண்டு வந்த இத்திட்டத்திற்கு தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டி மீண்டும் துவக்கியுள்ளார் தி.மு.க அரசின் நிர்வாகத் திறனற்ற முதல்வர். எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ளது என்று கூறும் இந்த அரசு, மூன்று கோடி ரூபாயை வீணடித்து நிகழ்ச்சியை நடத்தியது ஏன்?சொல் ஒன்று, செயல் ஒன்று எனவும், சித்தம் போக்கு சிவம் போக்கு என்றும் செயல்படும் இந்த தி.மு.க அரசு, மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்” என்று கூறியுள்ளார்.