காங்கிரசுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளை சேர்ந்த 17 எம்.பி’க்களும் 104 எம்.எல்.ஏ’க்களும் பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளதாத தெரியவந்துள்ளது. இது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி உட்பட எதிர்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யார் அந்த செல்லாத ஓட்டு என்பதுதான் தி.மு.கவினரிடையே பேசுபொருளாக உள்ளது. இதனிடையே, அடுத்து நடக்கவுள்ள துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், தங்களுக்குத் தெரியாமல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மார்க்கரெட் ஆல்வாவை அறிவித்துள்ளது. எனவே, நாங்கள் அந்த தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. “குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என திருணமூல் காங்கிரஸ் கட்சி ஏன் விலகியது என எனக்கு தெரியாது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.